செய்திகள்

ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பு: கர்நாடக ‘பந்த்’தால் வெறிசோடிய சாலைகள்

பெங்களூரு, மார்ச் 17–

ஹிஜாபுக்கு எதிரான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, இன்று முஸ்லிம் அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தெருக்கள் வெறிச்சோடியது.

பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் 15ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் பல மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர்.

ஹிஜாப் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சாலைகள் வெறிச்சோடியது

அதன்படி, ஹிஜாப் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் சிவாஜி நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

அதுபோன்று மங்களூருவில் மீன்பிடித் துறைமுகம், சென்ட்ரல் மார்க்கெட், ஸ்டேட் வங்கி, ஏபிஎம்சி மார்க்கெட் மற்றும் பிற வணிகப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தட்சிண கன்னடாவின் பிற பகுதிகளில் பெரும்பாலான கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகளும் மூடப்பட்டன.

பந்த் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கூறுகையில், “அனைத்துப் பகுதிகளிலும் முழு அடைப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பந்த்க்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. யாரையும் கட்டாயப்படுத்தாமல் அவரவர் விருப்பதின்படியே முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.