காமிராமேன் – ஓம்பிரகாஷ், ஸ்டண்ட் டைரக்டர் – சுப்ரீம் சுந்தர் : திரைமறைவு ஹீரோக்கள்
ரஷ்யாவுக்கு தெற்கே,
துருக்கிக்கு கிழக்கே,
கசாப்பியன் கடலுக்கு மேற்கே,
ஈரானுக்கு வடக்கே,
கிழக்கு ஐரோப்பாவுக்கும்- தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே
தென் காகஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது அஜர்பைஜான் நாடு.
90 லட்சம் மக்கள் தொகை கொண்டது.
எண்ணெய் மூலமே பெரும் வருமானம்.
தலைநகரம்: பாக்கு
நாணயம் : அஜர்பைஜானி மனத்.
ஆட்சி மொழி: அஜர்பைஜானி
அடுத்தடுத்து நாலு தடவை லைக்கா சுபாஸ்கரன் செலவில் இயக்குனர் மகிழ்திருமேனி (முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, கோமன், தடம், கலகத் தலைவன்) அஜர்பைஜான் நாட்டுக்குப் பறந்து, பறந்து 2 ஆண்டுகளில் வெற்றிகரமாகப் படத்தை முடித்து இருக்கிறார் என்றால்… அந்த நாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு தெரிந்திருக்க வேண்டாமா?! அதற்காகத்தான் அந்நாடு பற்றிய ஒரு சிறு தகவல். (முழுப் படத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பார்க்கிறோம், பாஸ்போர்ட், விசா எடுக்காமல்)
‘தல’- அஜித்தின் கடுமையான உழைப்பில்… நிஜமாகவே கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் படம்: ‘‘விடாமுயற்சி’’.
திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவி ராகவேந்திரா … தவிர இன்னும் முகம் தெரிந்த நால்வர் மட்டுமே நம்மூர் நடிகர்கள். மீதி எல்லாமே அஜர் பைஜான் நாட்டு முகங்கள்.
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ், படத்தின் நாயகனே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு அஜர்பைஜான் நாட்டின் இயற்கை அழகை மனதில் ஆழமாகப் பதியும்படி படம் பிடித்து இருக்கிறார். சூப்பர், சூப்பர்.
இசை: அனிருத்.- ‘‘விடாமுயற்சி’’ என்னும் டைட்டிலுக்கு ஒத்துப் போகும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் பாட்டு வரிகளில்… ஆரம்பத்தில் வரும் அஜித். திரிஷா திருமண வரவேற்பு பாட்டு வரிகளில் அனிருத்தின் வாத்தியக் கருவிகள் காயப்படுத்தாமல் இருந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வார்த்தைகள் புரியாத அளவுக்கு காதைத் துளைக்கும் சத்தத்துடன் பாடல்களை தருவது என்பது… அனிருத் விஷயத்தில்- அது, ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஸ்டண்ட் : சுப்ரீம் சுந்தர். அர்ஜுனின் 3 கூட்டாளிகளுடன் ஓடும் காரில் அஜித் போடும் அதிரடி ஸ்டண்ட், கிளைமாக்சில் அர்ஜுனுடன் போதும் அதிரடி ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தரைப் பேச வைக்கும். உயிரை பணயம் வைத்து படமாக்கி இருக்கிறார்கள்.
அஜர்பைஜான் நாட்டில் கதை ஆரம்பமாகி, அங்கேயே முடிகிறது. காதலித்து திருமணம் செய்த ஜோடி அஜித்- திரிஷா. 12 ஆண்டுகள் திருமண வாழ்வில் மனக்கசப்பு. பரஸ்பரம் பிரிவதற்கு சம்மதிக்கிறார்கள். தந்தை வீட்டில் திரிஷாவை ஒப்படைப்பதற்கு முன் அவருடைய ஆசை யை நிறைவேற்ற சொகுசு காரில் கடைசி பயணம் மேற்கொள்கிறார் அஜித்.
ஆத்திரம் அவசரம் என்றால் கூப்பிட்ட குரலுக்கு யாருமே வந்து நிற்காத ஒரு பொட்டல். மலைக் குன்றுகளும், பாலைவனம் மாதிரி மணல் பரப்பும் நிறைந்த நீண்ட நெடுஞ்சாலையில் திடீரென்று கார் ”Breakdown”.
செய்வது அறியாது அஜித்- திரிஷா தவியாய் தவிக்கும் நேரம்… ஆபத்பாந்தவனாக , காதலியோடு ட்ரக்கில் வந்து சேரும் அர்ஜுன். அவன் பேச்சைக் கேட்டு அவனோடு த்ரிஷாவை ஏற்றி அனுப்பப் போக, விதி விளையாடுகிறது. திரிஷா மாயம். எங்கு போனார், எப்படிப் போனார், யார் கடத்தினார்கள், எங்கு வைத்திருக்கிறார்கள் என்று பின்னணி எதுவும் தெரியாமல் புழுவாய் துடித்து போகும் அஜித். கடத்தப்பட்ட மனைவியைத் தேடிக் கண்டுபிடிக்க முயலும் ஜீவ மரணப் போராட்டம் தான் “விடாமுயற்சி”.
2 மணி 35 நிமிடம் ஓடும் படம்.
காதல் இல்லை,
டூயட் இல்லை,
காமெடி இல்லை,
கலகலப்பு இல்லை.
முதல் 30 நிமிடம் அஜித் – திரிஷா சந்திப்பு- அலைபேசியில் மெசேஜ்- ஹோட்டலில் சந்திப்பு- தோழிகளிடம் காதல் திருமணம் நடந்த கதை சொல்லும் காட்சிகள்.
அடுத்து 30 நிமிட ஓட்டத்தில்- ஈ காக்காய் இல்லாத வறண்ட பாலைவனமாக காட்சி தரும் நீண்ட … நீண்ட… நீண்ட… ஒரு நெடுஞ்சாலையில் அஜித் ஓட்டும் கார் பறக்கும் காட்சிகள்.
இடைவேளை – திடீர் திருப்பம். திரைக்கதையில். நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் மகிழ்திருமேனி. கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது போலவே. மனைவியை கடத்திய கும்பலை துவம்சம் செய்து விட்டு மனைவியோடு மீண்டும் இணைவதே கதை.
ஹீரோ ஒர்ஷிப், ஹீரோ இமேஜ் இரண்டையும் இந்தப் படத்தில் தகர்த்திருக்கிறார் அஜித். சாமானியன் மாதிரி ஒரு கதாபாத்திரம். ‘‘இது அஜித் படம் அல்ல, அஜித் படம் அல்ல. மாறிப் பயணித்திருக்கிறோம்’’ என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்திருமேனி சொல்லிக் கொண்டிருந்த வாசகங்கள் ‘‘விடாமுயற்சி’’யில் பலி த்திருக்கிறது. அவர் சொல்வது போலவே இது அஜித் படம் அல்ல.
அஜித்தை இன்னார் தான் அடிப்பது என்று கணக்கு வழக்கு இல்லையா?… ஒவ்வொரு கதாபாத்திரமும் அடித்து உதைத்து ரத்தம் சொட்ட வைப்பது. திரைக்கதை. அதற்காக இப்படியா?
அஜித்தை- சாவடி அடிக்கிறார்கள், சாவடி அடிக்கிறார்கள், சாவடி அடிக்கிறார்கள், அடித்துக் கொண்டே இருக்கிறார்கள், பதிலடி கொடுக்காமல்… பொறுமையாக கடைசி கிளைமாக்ஸ்ல் மட்டுமே வெறி கொண்டவர் போல, அர்ஜுனன், அவரது கூட்டாளிகளையும் தீர்த்து கட்டுவது மட்டுமே அஜித் ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
1997இல் ஹாலிவுட்டில் திரைக்கு வந்த ”Breakdown” படத்தை ஈயடிச்சான் காப்பியாக்கி இருக்கிறார்கள். ஒரு சில மாற்றங்களை தவிர. அதற்காக ஹாலிவுட் படம் எடுத்த பாரமவுண்ட் நிறுவனத்திற்கு கேட்ட உரிமைத் தொகையில் ஓரளவை கோடிக்கணக்கில் கொடுத்திருப்பதாக காதுக்கு சேதி. (கதைக்கா.. பஞ்சம்…? நம்ம ஊரில்?!)
அஜர்பைஜானி மொழியில் பேசப்படும் வசனங்களை தமிழில் சப்டைட்டில் போட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். அனுபவம் புதுமை.
திரிஷாவுடன் திருமண வரவேற்பு பாடலில் அஜித்திடம் இளமையில் முதுமை கண் சிமிட்டுகிறது. திரிஷா- கடத்தப்படும் நாயகி. அவ்வளவே. நடிப்புக்கு இடமே இல்லை. அழகுப் பதுமை, வருகிறார், போகிறார், வந்து வந்து போகிறார்.
ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர்- மூன்றின் கலவையில்–
மகிழ்திருமேனியின்
” விடாமுயற்சி”:
ஹாலிவுட் ஸ்டைலில்
மேக்கிங்,
அஜித் பயணத்தில் மாற்றம்!
– வீ.ராம்ஜீ