செய்திகள்

ஹாத்ரஸ் சம்பவம்: போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் சோதனை

Makkal Kural Official

மணிப்பூரி, ஜூலை 4–

உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் இன்று சோதனை செய்துள்ளனர். போலே பாபாவை தேடி வரும் போலீசார், அவரது ஆசிரமத்தில் மறைந்திருக்கிறாரா அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனையை நடத்தி வருகிறார்கள்.

ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், ‘போலே பாபா’ என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 2–ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடர்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில், ஆன்மிகச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் இன்று சோதனை செய்துள்ளனர். சோதனைக்குப் பிறகு, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுகையில், ஆசிரமம் முழுக்க சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதில் போலே பாபா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 40 முதல் 50 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். நேற்றும் ஆசிரமத்துக்கு பாபா வரவில்லை என தெரிவித்தார். ஆசிரமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலே பாபா கருத்து

இந்த நிலையில் ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சாகர் விஷ்வ ஹரி போலே பாபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சனையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள போலே பாபா, இதில் வாதிட உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஏ.பி.சிங்கை நியமித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரான ஏ.பி.சிங் டெல்லியின் நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட்டவர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.

ஹாத்ரஸ் சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறும்போது, “இந்த வழக்கில் முழு ஒத்துழைப்புதர பாபா தயாராக உள்ளார். இந்த பிரச்சனையில் முழுமையான விசாரணை அவசியம் என்பது அவரது கருத்து.” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *