விசாரணை குழு அறிக்கை தாக்கல்
லக்னோ, ஜூலை 9–
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு அதிக கூட்டம் கூடியதே காரணம் என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்பொழிவில் பங்கேற்று பேசினார். இதில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அங்கு திரண்டனர். சாமியார் புறப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும் 121 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது.
ஏடிஜிபி அனுபம் குல்ஷ்ரேஷ்தா மற்றும் அலிகார்க் கமிஷனர் சைத்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினர் 128 சாட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையை மாநில அரசு இன்னும் வெளியிடாத நிலையில், அதில் உள்ள சில முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
அதில் நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம் கூடியதே 121 பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம். இந்த துயர சம்பவத்தை போலே பாபா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிர்த்து இருக்கலாம். குற்றவாளிகள் என அறியப்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மாவட்ட நிர்வாகமும் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பித்து விடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.