ஐகோர்ட் விதித்த தடை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
ஹரியானா, பிப். 17–
ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்திற்கு ஐகோர்ட் விதித்த தடை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பத்துள்ளது.
ஹரியானாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு என 75 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும், மாநில அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
உள்ளூர் மக்களுக்கு என 75 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் ஹரியானா மாநில உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு சட்டம், 2020 கடந்த நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கும் பணிக்கு செல்லுபடியாகும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இச்சட்டம் குறித்து விளக்கம் தந்த ஹரியானா அரசு, “ஹரியானாவில் வணிகம், உற்பத்தி, சேவை சார்ந்த தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை சம்பளம், ஊதியம் அல்லது பிற ஊதியத்தில் பணியமர்த்துபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்” எனக் குறிப்பிட்டது.