குருகிராம், மே 18–
ஹரியானாவில் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா பிருந்தாவனில் தரிசனம் செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ஹரியானா குண்ட்லி மனேசர்–பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது நூ வட்டம் டவுரு அருகே திடீரென தீப்பற்றி எரிந்தது.
பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், பேருந்தை பின்தொடர்ந்து சென்று வாகனத்தில் இருந்து தீப்பற்றி எரிவது குறித்து ஓட்டுநரிடம் எச்சரித்து, பேருந்தை நிறுத்த சொன்னார். உடனடியாக அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பலரை வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். மேலும் விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதில், பேருந்தில் இருந்தவர்களில் 9 பேர் தீயில் கருகி பலியாகினர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து பேருந்திலிருந்து மீண்ட பயணி ஒருவர் கூறுகையில், நாங்கள் 10 நாட்களுக்கு புனித தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல பேருந்தை வாடகைக்கு எடுத்தோம். நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தூங்கிக்கொண்டிருந்தபோது புகை நாற்றம் வீசியது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் டிரைவரை எச்சரித்ததையடுத்து பேரு ந்து நின்றது,” உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் கூறினார். சுமார் 3 மணி நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக இருந்தது.