வாழ்வியல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ரங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வார் மூவரும் ஒரே நிலையில் காட்சி தரும் தனி சிறப்புமிகு ஆலயம்

*மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்றால் பெண்கள் விரும்பிய, நல்ல கணவன் கிடைப்பான் என்பது ஐதீகம்

 

வடபத்ரசாயி ஆண்டாள் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர்.

விருதுநகர் மாவட்டத்தில் நகரசபை அந்தஸ்து பெற்றுள்ள நகரமான ஸ்ரீ வில்லிபுத்தூரில் 1000 வருட தொன்மை பெற்றுள்ள சரித்திர பிரசித்தி பெற்றுள்ள மிகப்பெரிய ஆலயம் வடபத்ரசாயி ஆண்டாள் திருக்கோவில் ஆகும். இங்குள்ள 200 வருடமாக இயங்கி வரும் மிகவும் பழமை வாய்ந்த இந்து உயர்நிலைப்பள்ளியும் 135 வருட தொன்மை வாய்ந்த பென்னிங்டன் பொது நூல்நிலையமும் இந்து சமயத்தின் நாகரீகத்தை பறை சாற்றுகின்றன.

இந்த தலத்தில் உதித்த பெரியாழ்வார் அவரது புதல்வி ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பல்லாண்டு, திருப்பாவை அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை நடை திறப்பின் போது பாடுவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மல்லி என்ற அரசி ஆண்டு வந்தாள். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒருவன் பெயர் வில்லி மற்றொருவரின் பெயர் கந்தன். இரண்டு மகன்களும் பெரியவர்களான பின்பு வேட்டைக்கு சென்றனர். அப்பொழுது ஒரு புலி கந்தனை அடித்து கொன்றுவிட்டது. இதை அறியாத வில்லி தன் சகோதரனை தேடிக் காட்டில் அலைந்து களைப்படைந்து அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.

அப்பொழுது கடவுள் அவனது கனவில் தோன்றி நடந்த உண்மைகளை விளக்கினாராம். அதன் பின்பு, தன் சகோதரனின் நினைவாக அவர் ஆணையின் படி, காட்டில் ஒரு அழகிய நகரத்தை நிர்மாணித்தார். அதனாலேயே இந்த ஊர் வில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்டதாம்.

பின்னர் அழகிய மதிப்பிற்குரிய என்ற பொருள் தரும் வடசொல்லான ஸ்ரீ சேர்க்கப்பட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றாயிற்று.

இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலின் கோபுரம் தான் நமது தமிழ்நாட்டின் அடையாளச் சின்னமாகும்.

கோபுரத்தின் உயரம் 196 அடி மற்றும் 11 அடுக்குகள் கொண்டது. இதைக்கட்டியது பெரியாழ்வார் என்பவர் ஆவார். இவர் ஆண்டாளின் தகப்பனாரும் இந்த தலத்தின் இறைவர் வடபத்ரசாயின் மாமனாரும் ஆவார். பாண்டிய மன்னன் வல்லபதேவர் சபையில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று அதற்கு சன்மானமாக கிடைத்த தங்க காசுகளைக் கொண்டுதான் இந்த கோவில் கட்டியதாக நம்பப்படுகிறது. பின்னர் கி.பி.1536–ம் ஆண்டு பாண்டிய, சோழ மன்னர்கள் விரிவாக்கம் செய்து கோவிலை அழகு செய்தனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளின் இதுவும் ஒன்று. சுயம்பு மூர்த்தியாக வடபத்ரசாயி என்ற ரங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சி தருவது இங்கு மட்டுமே என்பது தனி சிறப்பு. ரங்க மன்னரின் வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடையில் உடைவாள் வைத்துக்கொண்டு ராஜகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மற்றுமொரு விஷேசம் காலில் செருப்புடன் இருக்கிறார். ஆண்டாள் பூமியைக் காட்டியபடி வலதுகையும் இடது கையில் கிளியுடனும் தோற்றமளிக்கின்றார். கிளியை கண்ணனுக்கு தூது அனுப்பியதாலேயே கையில் கிளி உள்ளது என்பதாகும். வியாசரின் மகனாகிய சுகப்பரம்ம மகரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் கூறுவது உண்டு. தினமும் இலைகளால் கிளி செய்து மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில் அதை ஆண்டாளுக்கு வைக்கப்பட்டு, அடுத்த நாள் எடுத்து பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதைப்பெறும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கு ஒரு பெரிய நந்தவனம் பெரியாழ்வார் உருவாக்கியது . அதில் இருந்து விளையும் மலர்களாலேயே தினமும் மாலை கோர்த்து இறைவனுக்கும் அம்மனுக்கும் சாத்துகின்றனர். திருவிழாக்களின் போது ஸ்ரீரங்கத்திலிருந்தும் மாலைகள் இங்கு வருகின்றன.

மதுரையில் சித்திரா பவுர்ணமியின் போது இங்கிருந்து ஆண்டாள் கொடுத்தனுப்பும் பட்டுப் புடவையை கள்ளழகர் அணிந்து கொண்டு ஆற்றில் இறங்கி பரிபாலிக்கின்றார். அழகர் அணியும் பட்டின் நிறத்தைப்பொறுத்து அந்த ஆண்டின் பலன் அமையும் என்பர். மேலும் பட்டின் நிறம் கள்ளழகர் விருப்பம் போல் மாறி விடும் என்கின்றனர். ஆண்டாள் கண்ணனை மணம் செய்து வைக்க திருப்பதி வெங்கடசலபதியிடமும் மதுரை கள்ளழகரிடமும் வேண்டியதாலும் அவர்களுக்கு நன்றிசெய்யும் விதமாக, உத்சவ ஆண்டாளுக்கு செலுத்திய பட்டுபுடவை மாலை, கிளி, சித்ரா பௌர்ணமி அன்று அனுப்பப்படுகிறது.

ஆண்டாளுக்கு தனி கருவறை உள்ளது. இதில் ஆண்டாள் கிழக்கு நோக்கி இருக்கிறார். கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களுக்கு அதிக சக்தி உண்டு என்றும் அவரை வணங்கும் பக்தர்களுக்கு கீர்த்தியும் வேண்டியது அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதன் பொருள் பூமாலை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குலவிளக்கு என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்.

ஆண்டாள் பத்ரசாயி மீது கொண்ட பக்தியாலும் காதலாலும் தினமும் பூமாலை கோர்த்து, அதை தான் முதலில் சூடி அழகு பார்த்த பின்பு கோவிலுக்கு அனுப்புகிறாள். ஒருநாள் மாலையில் இருந்த தலை முடியைக்கொண்டு நடப்பதை அறிந்து வருத்தமுற்று, ஆண்டாளை கண்டித்து புது மாலையை கோர்த்து அனுப்ப, எம்பெருமான் அதை ஏற்றுக்கொள்ளமறுத்தார். அப்பொழுதுதான் பெரியாழ்வாருக்கு உண்மை புரிய தினமும் வழக்கம் போலவே ஆண்டாள் சூடிய மாலையை பெருமானுக்கு அணிவித்து பெருமை கொண்டார்.

இங்குள்ள திருத்தேர் மிகவும் பெருமை வாய்ந்தது. அதில் அழகிய சிற்பங்கள் உள்ளன. தேரில், சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய ஆவணி 13 குருவாரம் என்று தேரில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து இதன் தொன்மை நமக்கு அறிய வருகிறது. ஆண்டாள் பிறநத ஆடிப்பூரம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெருமாளுக்கு வெண்ணை, மாலை, தூய ஆடைகள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். அன்னதானம் செய்தும் சிறு விளக்குகள், தந்தும் வழி பட்டால், திருமண வரம், கல்வி, வியாபார முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் மற்றும் விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெரியாழ்வார் பாண்டிய மன்னர் முன்பு பாடியதைககாண பெருமாள் வாகனத்தில் தோன்றியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டனராம். அவர் மீது திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக, பெருமாளே, நீ பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் வாழ்க என்று திருப்பல்லாண்டு பாடினார்.

ஆகவேதான், பெருமாள் அருளால், உலகில் உள்ள அனைத்து திருமால் கோவில்களிலும் தினமும் பாடப்படுகிறது. வைகாசி பௌர்ணமியின் போது, ஆண்டாளுக்கு தயிர் சாதம், பால் மாங்காய் நைவேத்யம் செய்கின்றனர்.

மார்கழியின் போது திரட்டுப்பால் நைவேத்யம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து காய்கறிகளையும் பரப்பி வைத்து, பச்சப்பரத்தல் செய்கின்றனர். இதை பெண்கள் உட்கொண்டால் சகலமும் கிட்டும், ஆரோக்கியம் தழைக்கும் என்பது நம்பிக்கை. அர்ச்சகர்கள் நடை திறக்கும்போது, ஆண்டாளுக்கு வலது புறம் உள்ள கண்ணாடியில் பார்க்கின்றனர். பக்தர்கள் திரையை விலக்கி பார்த்த பின்னர் தான் அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பது ஐதீகம்.

பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக நோன்பு இருந்து தான் விரும்பிய கணவன் கிடைக்கப்பெற்றார் ஆண்டாள்.

ஆகவே பாவை நோன்பு மார்கழி மாதத்தில் இருக்கும் பெண்களுக்கு விரும்பிய, நல்ல கணவன் கிடைப்பான் என்பது ஐதீகம். ஆண்டாள் திருப்பாவையில் எல்லே இளங்கிளியே என்று செய்யுள் பாடியதாலே, இங்குள்ளவர்கள் ஆண்களையும்பெண்களையும் “ஏலே” என்று செல்லமாகவும் கோபத்திலும் பயன்படுத்துகின்றனர். மேலும் திருப்பாவையில் “குடம் வைக்க பால் நிறையும்” என்பது இப்பகுதியில் பசு வளர்ப்பவர்கள் அதிகமாக இருந்தனர் என்றும் ஆகவேதான் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் பால்கோவாவிற்கு பெயர் பெற்ற தலமாக இருக்கிறது.

ஆண்டாள் திருக்கோவிலில் முதல் பிரகாரத்தில், லட்சுமி அயக்ரீவர், ஓவிய வடிவத்தில் தம்மை வணங்குபவர்களுக்கு கல்வி ஞானம் தருகிறார். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி வாலை தலைக்கு மேலே வட்டமாக சுற்றியபடி வித்தியாசமாக இங்குள்ள தூணில் காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தின் போது திருக்கல்யாணம், தேர்த்திருவிழா இரண்டும் நடப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

ஸ்ரீ என்பது வடமொழி என்பதால் திரு என சேர்த்து திருவில்லிபுத்தூர் என்றும் அழைக்கின்றனர்.

நீதிபதி கே.வீராசாமி, விடுதலை வீரர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு, விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இங்கு பிறந்தவர்கள் ஆவர்.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8மணி வரையும் கோவில் பகதர்களுக்காக திறந்திருக்கிறது.

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்

சென்னையிலிருந்து தினமும் பொதிகை விரைவு ரயில் இங்கு வந்து செல்கிறது. தொலை பேசி எண் 04563.260254.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *