சினிமா

‘ஸ்ரீராமச்சந்திரா’ இருதய டாக்டர் தீரஜ் ஹீரோ; ‘ஜெட் ஏர்வேஸ்’ அதிகாரி சந்துரு டைரக்டர்

Spread the love

ஒரு டாக்டர் நடிகராகும் பட்டியலில் இப்போது தீரஜ் என்னும் இளைஞரும் இணைந்திருக்கிறார். சென்னை நகரில் பிரபலமான போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் தீரஜ். இவர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் ‘‘போதையேறி புத்தி மாறி’’என்னும் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகி ப்ரதாயினி, நம்பர் ஒன் மாடல் அழகி. 2ம் கதாநாயகி துஷாரா. கதை எழுதி இயக்கி இருக்கிறார் சந்துரு கே.ஆர். இவர், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவர்.

பள்ளி – கல்லூரி நாட்களில் சினிமா மீது இருந்த மோகம் காரணமாக, என்றாவது ஒருநாள் இந்தக் கலைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் இருந்ததால் 2 குறும்படங்களை எடுத்து இருக்கும் அனுபவத்தின் முடிவில் இப்போது ஸ்ரீநிதி சாகர் தந்திருக்கும் துணிச்சலில் சினிமாவில் இயக்குனராக கால் பதித்திருக்கிறார் சந்துரு.

படத்தின் இசையமைப்பாளர் கேபி. இவரும் நாயகன் தீரஜும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அதுபோலவே இயக்குனர் சந்துருவும் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அறிமுக நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற சாபு பேசுகையில், பள்ளியில் ஒன்றாக படித்திருக்கும் மாணவர்கள் இணைந்து விளையாட்டாக எடுத்திருக்கும் பொழுதுபோக்கு படம் இது. ‘போதையேறி புத்தி மாறி’ படத்தின் தலைப்பே வித்தியாசப்பட்டிருக்கும். சொல்லியிருக்கும் கதையில் ரசிகர்களுக்கும் ஒரு மெசேஜ் உண்டு என்பதை எடுத்துக் கூறினார் சாபு.

நாயகன், நாயகிகள், இயக்குனர் அறிமுகமாகும் இப்படத்திற்கு பெரும் பலமே ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். பிதாமகன், உதயநிதி ஸ்டாலினின் படங்கள், சிவகார்த்திகேயனின் சீமைராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கேமராவைப் பேசவைத்த பாலசுப்பிரமணியம், எங்களுக்கு யானை பலம் என்று இயக்குனர் சந்துருவும், நாயகன் தீரஜும் மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

* நாயகன் தீரஜ் நேரில் எப்படி இருக்கிறாரோ திரையிலும் அப்படியே. கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லை என்றால்… நாங்களும் இல்லை, இந்தப் படைப்பும் இல்லை… என்று உணர்வுபூர்வமாகச் சொல்லி, இயக்குனர் குழுவைச் சேர்ந்த கதிர், நவ்ஷத், அருண், மணிரத்தினம், யோகி, படத்தொகுப்பு குழுவைச் சேர்ந்த வெற்றி மணி உள்ளிட்ட ஒவ்வொரு துறையின் (மக்கள் தொடர்பாளர் டிஒன் சுரேஷ் – ரேகா, நாசர்) கலைஞர்களையும் மேடையேற்றி அவர்கள் முகமும் பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்தி தனிப்பட்ட முறையில் தீரஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மனைவிக்கு மீண்டும் உயிர் தந்தவர் தீரஜ்

* மரணத்தின் விளிம்பைத் தொட்டு ஜீவ மரணப் போராட்டத்தில் இருந்த தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றியவர் தீரஜ் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி மேலிட மேடையிலேயே கண் கலங்கி விசும்பி அழ ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். அவருடைய பெரிய மனசுக்கு நன்றிக் கடனாகத்தான் நான் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்து இருக்கிறேன் செல்லும்போது என்று தேம்பித் தேம்பி அழுது விட்டார். அவரை ஆறுதல் சொல்லித் தேற்றி மேடையில் சமாதானப்படுத்தினார் தீரஜ்.

‘‘பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம் ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது என்பது தான் கடினம். இருக்கிற காலத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்துவிட்டு, அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்… இது இளமைக் காலத்திலிருந்து என்னை பற்றிக் கொண்டிருக்கிறது…’’ என்று தம்முடைய சுபாவத்தை வெளிப்படுத்திய போதும் அடக்கத்தோடு தான் இருந்தார் தீரஜ்.

சென்சார் பாராட்டு

பொழுது விடிந்தால் திருமணம், அதற்கு முதல் நாள் இரவு மணமகன் கொடுக்கும் பேச்சிலர்ஸ் பார்ட்டி. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை சொல்லும் கதை ‘‘போதையேறி புத்தி மாறி’’ படம்.

ஒரே வீட்டுக்குள் 10 கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு நடந்திருக்கும் சம்பவக் கோர்வைகள். அடுத்து என்ன அடுத்து என்ன என்று வெள்ளித்திரையை வெறிக்கப் பார்க்க வைக்கும். அடுத்து இதுமாதிரிதான் காட்சி வரும் என்று யாரும் சொல்ல முடியாது. வித்தியாசமான முடிவு. அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையோடு சந்துரு படத்தை எடுத்திருக்கிறார். கதிர் நடராஜனின் வசனம் விறுவிறுப்பு கூட்டும். சென்சார் குழு பாராட்டியது என்று தீரஜ் குறிப்பிட்டார்.

தோழமை உணர்வோடு அடுத்தவர்களின் தோளில் கை போட்டு பழகுவதும், பார்த்த மாத்திரத்திலேயே நட்புறவுக்கு காலூன்றி, உதவி என்று வந்தவர்களுக்கு இயன்றதை செய்பவரது சுபாவத்திலேயே தீரஜூம் இருந்ததை நேரில் பார்த்தபோது திரைப்படத்திற்கு இன்னொரு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் உதயம் ஆனதாகத் தான் உணர்வுகள் உந்தித் தள்ளியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *