செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு:

3,600 பக்தர்கள் தரிசனம்

முன்பதிவு செய்யாதவர்களுக்கு டோக்கன் வழங்கி அனுமதி

திருச்சி, செப்.20–

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று 3,600 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு டோக்கன் வழங்கி அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று 3,600 பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு டோக்கன் வழங்கி அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இந்த தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல், வௌிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இதனையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கோவிலில் காலை முதலே சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாத சனிக்கிழமை பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்ய பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 2 மணி நேரத்துக்கு 600 பக்தர்கள் வீதம் டோக்கன் கொடுத்து ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் முன்பதிவு குறித்து தெரியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்கும் வகையில், முன்பதிவு செய்து வராமல் இருந்தவர்கள், முன்பதிவு செய்யாமல் காலியாக இருந்த எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு டோக்கன் கொடுத்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் சித்திரை வீதிகளில் இரும்பு தடுப்பு வைத்து முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *