செய்திகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம்

Spread the love

கரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம்

 

திருச்சி, மார்ச்.29–

கரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது.

மேலும், மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்திருந்தார். இந்நிகழ்வில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணிபின்னர், ராஜகோபுரத்திற்கு அருகில் உள்ள கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினருடன் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *