செய்திகள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

திருச்சி, ஆக.11–

ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து புனித நீராடினர்.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒன்றாக அமரவைத்து அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.கடந்த ஆண்டு போதிய மழையில்லாமல் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இதனால் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் பிண்டங்களை கரைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.ஆனால் இந்த ஆண்டு கர்நாடாகாவில் பலத்த மழை பெய்ததால் தொடர்ந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதில் திரளான பக்தர்கள் தடுப்பு வேலிக்குள் நின்று ஆற்றில் புனித நீராடினர்.

இதில் ஏராளமான பெண்களும் திரண்டு வந்து முன்னோர்களை நினைத்து வழிபட்டு அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ரப்பர் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *