ஸ்ரீரங்கம், ஜன. 2–
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ‘‘ரங்கா… ரங்கா…’’ கோஷத்துடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 22–ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்துக்குப் பிறகு, வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் சிம்ம கதியில் புறப்பட்டார். ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபம் வழியாக, பரமபதவாசலை நம்பெருமாள் வந்தடைந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா என்ற பக்தி கோஷம் எழுப்ப 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் வந்தார். அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ‘‘ரங்கா… ரங்கா…’’ என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசலை கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.