செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேண்டுமா? மருத்துவர் வேண்டுமா?

சென்னை, ஏப்.11-

முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு நிறைவேறாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தி.மு.க.வை முடிவுக்கு கொண்டுவர போகிறவர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக போவதாக ஸ்டாலின் கனவு காண்கிறார். ஆனால் அந்த கனவு நிறைவேறாது. தி.மு.க. கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அளவில் 100 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

தனது சொந்த ஊரான தஞ்சையில் நிற்க முடியாததால், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் சாராய ஆலை நடத்துகிறார். ஆனால் நமது வேட்பாளர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடியவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேண்டுமா? மருத்துவர் வேண்டுமா?. கடந்த 2009-ம் ஆண்டு டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று மன்மோகன்சிங் மறுத்தார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளும், மத்தியில் 18 ஆண்டுகளும் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. 23 ஆண்டுகள் மது என்றால் என்ன? என்று மக்கள் தெரியாமல் இருந்தனர். ஆனால் கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார். தி.மு.க.வின் கடைசி முதல்வர் கருணாநிதிதான். இனிமேல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கூட தி.மு.க.வுக்கு கிடைக்காது. எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

கூட்டத்தில் அண்ணா தி.மு.க. மாவட்டச்செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் வைரமுத்து, பரணி பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *