செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் : மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆய்வு

மதுரை, செப். 20–

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளான கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய 4 மாசி வீதிகளில் ஸ்மார்ட் சாலை திட்டத்தின் கீழ் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துதல், 24×7 புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், மழைநீர் வடிகால் அமைத்தல், தரைவழி மின்வயர் செல்லும் பாதை அமைத்தல் ஆகிய பணிகளையும், தெற்கு மாசி வீதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு சாலைகள் அமைக்கும் பணியினை ஒவ்வொரு மாசி வீதியாக விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் வைகை ஆற்று கரையில் 81 ஆயிரம் கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும், வைகை ஆற்றின் பனையூர் கால்வாய் ஜீரோ பாயிண்ட் முகப்பு பகுதியில் ஷட்டர் அமைக்கும் பணியினையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம், மாடக்குளம் மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மெயின் அடைப்பு சரிசெய்யும் பணியினையும் மற்றும் 24 அடி ஆழத்திற்கு புதிய மேனுவல் அமைக்கும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த பாதாள சாக்கடை பணியின் மூலம் பழங்காநத்தம் பகுதிகள், துரைச்சாமி நகர் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, செயற் பொறியாளர்கள் முருகேசபாண்டியன், ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற் பொறியாளர்கள் சுரேஷ்குமார், மயிலேறிநாதன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *