நியூயார்க், ஜூலை 11–
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதில் 9 பறவைக் கூடுகள் அழிந்து விட்டது என்று பத்திரிகையாளர் கூறியதற்கு, இனி ஒரு வாரத்துக்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று எலன் மஸ்க் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி வருகிறார்.
அதன் தொடராக சீனாவில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் பயோனீர் என்ற நிறுவனம் உருவாக்கிய விண்வெளி ராக்கெட், சோதனையிடப்பட்டது. சோதனையின்போதே விண்ணில் பாய்ந்த ராக்கெட், மத்திய சீனாவில் உள்ள கோங்கி மலைப் பகுதிகளில் விழுந்து வெடித்து சிதறியது. அந்த ராக்கெட் வெடித்து சிதறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆம்லெட் சாப்பிட மாட்டேன்
அது தொடர்பாக ஸ்பேஸ் பயோனீர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தியான்லாங்-3 ராக்கெட் நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. முன்னதாகவே கோங்கி மலைப் பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை ஊடகவியலாளர் மைக் பெஸ்கா என்பவர் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து,“ராக்கெட் வெடித்து சிதறியதில் அங்கிருந்த 9 பறவை கூடுகள் அழிந்துள்ளது” எனக் குறிப்பிட்டு ராக்கெட் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விளைவுகளை விரிவாக எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்” எனக் கிண்டலாக பதிலளித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த பதிலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.