செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலி

Makkal Kural Official

மாட்ரிட், நவ. 1–

ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை நீரில் மூழ்கடித்தது.

சுமார் 5 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி நேற்று முன்தினம் 51 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்தன. இதில் மேலும் 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

வலென்சியாவில் குறைந்தது 92 பேர் உயிரிழந்துள்ளனர். வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு பேரும், மலாகாவில் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர்.

இதன்மூலம் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதி அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கின்போது மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களில் ஏறியும் உயிர் தப்பி உள்ளனர்.

3 நாட்கள் துக்கம்

அந்த நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் பெட்ரோ சான்செஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டு அரசு செய்து வருகிறது.

மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் விளை நிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றும் அங்கு தொடர்ந்து மழை பெய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *