ஸ்பெயின், மே 24–
ஸ்பெயின் பலேரிக் தீவில் நள்ளிரவில் உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் பலேரிக் தீவு பகுதியில் பால்மா டி மல்லோர்கா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 2 மாடி ஹோட்டல் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து செய்தி அறிந்த உடன், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
4 பேர் பலி
இந்த கட்டிட விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும், அதில் 7 பேர் படுகாயங்களுடன் பால்மாவில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் உள்ளூர் செய்திசேனல் வாயிலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விபத்தானது, அதிக நபர்கள் ஓட்டல் மொட்டை மாடியில் இருந்ததாகவும், அதன் காரணமாக பாரம் தாங்காமல் ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்பதை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.
பால்மா கடற்கரையில் ஏற்பட்ட பயங்கர விபத்து குறித்து எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும், மீட்பு நடவடிக்கைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளனர்.
#spain #4dead #hotel