செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது:வேதாந்தா கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி, மார்ச் 18

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, 2018 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என, வேதாந்தா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மற்றும் மதிமுக தலைவர் வைகோ உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தங்களது ஆலோசனையை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடைய ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கை அவசர வழக்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் மாதம் விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *