நாடும் நடப்பும்

ஸ்டாலின் வியூகம் என்ன? எதிர்பார்ப்பில் தமிழகம்

கடந்த ஆண்டு இதே மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் நடப்பாண்டு இறுதி பரிட்சைகள் ஆன்லைனில் அல்லது முந்தைய பரிட்சை மார்க்குகளில் தகுதி அடிப்படையில் என்று பல்வேறு முறைகளில் நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அவை பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது!

சமீபத்து இரண்டாம் அலை சிறுவர், நடு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கி வருவதுடன் உயிர் சேதமும் அதிகமாகவே இருப்பதால் கல்விக் கூடங்கள் பற்றிய விவாதம் சற்றே மவுனமாகவே இருப்பது ஏன்? என்று புரிகிறது.

உடல் ஆரோக்கிய கட்டுமானம் நிலைகுலைந்து இருக்கையில் இதர துறைகள் பற்றிய அக்கறை சற்று பின்னால் தள்ளப்பட்டிருப்பது நடைமுறை தான்! ஆனால் கல்வித் துறையை பற்றி யோசிக்காமல் விட்டு விட்டால் நாட்டின் எதிர்காலம் பாதிப்படையும்.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமைப்பு சார் துறைகளில் வேலையிழப்பு இன்னும் பெரிய அளவில் ஏற்படத் தொடங்கவில்லை. ஆனால் அமைப்புசாரா துறைகள் நெருக்கடிக்கு உள்ளாக ஆரம்பித்துவிட்டன.

இரண்டாம் அலையில் உள்ள சவாலை, வேலையிழப்பு எண்ணிக்கையைக் கொண்டு மட்டும் அளவிட்டு விட முடியாது. புதிய வேலைவாய்ப்பு எந்த அளவில் உள்ளது. ஊதியக் குறைப்பு நிலவரம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியதும் பல்வேறு மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கை தீவிரப்படுத்தின. விளைவாக ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மே மாதத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8 % ஆக அதிகரித்தது. அது மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் 14.5% ஆக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பான சிஎம்ஐஇ, இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 40.07 கோடி பேர் வேலையில் இருந்தனர். அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 39.81 கோடியாகவும் ஏப்ரல் மாதத்தில் 39.08 கோடியாகவும் குறைந்துள்ளது. வேலை இழப்பை எதிர்கொண்டு புதிய வேலையை தேடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1.60 கோடியாக இருந்தது. ஏப்ரலில் 1.94 கோடி உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் புதிய வேலை வாய்ப்பு நிலவரமும் மோசமாகவே உள்ளது. சுற்றுலாத் துறையில் புதிதாக ஆள் எடுப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 30% அளவிலும் கல்வி, ரியல் எஸ்டேட் போன் துறைகளில் 20 முதல் 30% அளவிலும் தொலைத் தொடர்புத்துறை, வங்கிகள் சார்ந்த வேலைகளில் 10 முதல் 20% வரையில் குறைந்துள்ளது.

இந்நிலை நீடித்தால் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகள் பெற முடியாமல் பாதிப் பேர் வீட்டில் சும்மா இருக்கப் போகிறார்கள். இது குடும்ப பாரத்தை மேலும் சுமையானதாக அல்லவா இருக்கும், சமுதாயத்திலும் பல்வேறு புதுப்புது சிக்கல்களையும் உருவாக்கிவிடும்.

19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழில் புரட்சியின் பயனை அமெரிக்கா பெற்று இரும்பு சார் நிறுவனங்கள் செல்வ செழிப்புடன் இருந்த காலமாகும். ஆனால் 1918ல் முதல் உலகப்போர், பிளேக் பெரும் தொற்று காரணங்களால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

அந்நிலையில் தான் அமெரிக்க தலைவர்கள் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க கல்வித் துறையை வலுப்படுத்தியாக வேண்டுமென்று முடிவெடுத்தனர்.

ஸ்டீல் நிறுவன அதிபர்களை பள்ளி, கல்லூரி கட்டுமானங்களுக்கு முதலீடு செய்ய கட்டளையிட்டனர். குறைந்தது நூலகத்தையாவது மேன்மைபடுத்திட உத்தரவிட்டனர். இதனால் நாடெங்கும் கல்விக் கூடங்களில் பிரமாதமான வளர்ச்சிகள் உருவானது. கார் தயாரிப்பாளர்களின் முதலீடுகளால் அவர்களுக்கான ஆராய்ச்சி படிப்புகள் உருவானது. கனரக முதலாளிகளின் முதலீடுகளால் பல்வேறு தொழில்கள் உருவாக ஆராய்ச்சிகள் வளர உற்பத்தித் துறை புது ஊக்கத்தை கண்டது.

ஆராய்ச்சிகளும் நூலகங்களும் கல்லூரி வளாக கட்டுமான வளர்ச்சிகளின் புதுப்பிப்பால் அடுத்த 60 ஆண்டுகளில் உலக ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியாக அமெரிக்க உயர்ந்து விட்டது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் பெரும்பாலோனார் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்தவர்களாகவே இருப்பதை பார்த்தும் வருகிறோம். எல்லா துறை முன்னேற்றங்களிலும் தேவைப்படும் காப்புரிமை பெற்றிருக்கும் நிபுணர்கள் அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்களாகவே இருக்கிறார்கள். ஆக உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமையை பெற உதவியது கல்வித்துறை முதலீடுகள் தான்!

தமிழகமும் இன்றைய சிக்கலிலிருந்து தப்பித்து விட முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கல்வித்துறையின் வளர்ச்சியையும் உரிய கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *