சென்னை, அக்.4–
மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று இரவு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள்.
மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்று இருக்கிறார்கள். ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் அங்கிருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என தெரிய வந்தது.
இந்த நிலையில் மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக மோசடி கும்பலில் சிக்கிய 13 தமிழர்களும் மீட்கப்பட்டு தாய்லாந்து அழைத்து வரப்பட்டனர். பாங்காங்கில் இருந்து 13 தமிழர்களும் விமானம் மூலம் புறப்பட்டு இன்று இரவு சென்னை திரும்புகின்றனர்.