செய்திகள் போஸ்டர் செய்தி

ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி கண்டனம்

Spread the love

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை

* வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு

* மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்ப்பதா?

ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி கண்டனம்

 

சேலம், மே 23–

தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார். மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார் என்றும் முதலமைச்சர் காட்டமாக கூறினார்.

சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இன்று சென்னையில் அதிகாலை தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கைது பற்றியும், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளித்தும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் கூறியதாவது:–

ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தது பற்றி இன்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். என் மீதும் அரசு மீதும் குற்றஞ்சாட்டி அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. பட்டியலினத்தவரை இழிவுபடுத்தி விமர்சனம் செய்து ஆர்.எஸ்.பாரதி பேசி இருக்கிறார். எனவே ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் 12.3.20 அன்று புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். இதற்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அரசியல் ஆதாயம் தேட அவதூறு

அரசியல் ஆதாயம் தேட பொய், அவதூறு பிரச்சாரம் செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இழிவுபடுத்தி பேசும்போது ஒருவர் புகார் செய்கிறார். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்கிறார்கள். இதில் அரசுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி அனுதாபம் தேடி பார்க்கிறார்.

இது கடும் கண்டனத்திற்கு உரியது.

ஆர்.எஸ்.பாரதி இதுபோன்று பட்டியலினத்தவரை இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது என்று கண்டிப்பது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு. ஆனால் அதை செய்யாமல் மற்றவர் மீது பழிபோட்டு அவர் தப்பிக்க பார்க்கிறார். சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் உள்ளவரை இழிவுபடுத்தி சேற்றை வாரி இரைத்திருக்கிறார். சட்ட ரீதியாக அவர் புகார் செய்திருக்கிறார். இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? பரபரப்பு செய்திக்காக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

இதுபோன்று புகார் அறிக்கை வந்தால் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் உண்மை தன்மையை ஆராய்ந்து செய்திகளை வெளியிட வேண்டும். மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். அரசியல் செய்வதற்காக நாடகம் ஆடுகிறார்கள். நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இதுபோன்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

முறைகேடு இல்லை

இ–டெண்டர் பற்றி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்திருக்கிறார். டெண்டர் திறக்கப்படவில்லை. சிலர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். யார் யார் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும். டெண்டர் போட்டவருக்கு மட்டும் தான் தெரியும். டெண்டர் திறக்கும்போது தான் யார் யார் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். இது ‘இ– டெண்டர்’ முறை. எனவே டெண்டர் போட்டது யார் என்று அவருக்கு எப்படி தெரியும். தி.மு.க. ஆட்சியில் அப்படி நடந்திருக்கும். வேண்டியவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் ‘ஷெட்யூல்’ கொடுக்கப்பட்டிருக்கும். எனவே தி.மு.க. ஆட்சியில் நாம் செய்தோமே என்று ஸ்டாலினுக்கு எண்ணம் வந்திருக்கிறது.

‘இ–டெண்டரில்’ யாரும் கலந்து கொள்ளலாம். எனவே இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். எதுவும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இ– டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி கூறியதில் எந்த உண்மையும் இல்லை. ஏதோ விஞ்ஞானி போல பத்திரிகை விளம்பரத்துக்காக அவர் பொய் புகார் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *