போஸ்டர் செய்தி

ஸ்டாலின், தினகரனை நம்பவே நம்பாதீர்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஒட்டப்பிடாரம், மே.11–

மக்களை ஏமாற்றி கழுத்தை அறுத்து விடுவார்கள். ஸ்டாலின், தினகரனை நம்பவே நம்பாதீர்கள் என்று மக்களை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நேற்று (10–ந் தேதி) தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம், வசவப்புரம் பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த போது கூறியதாவது:–

நடைபெறவிருக்கின்ற ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் சார்பாக வெற்றி வேட்பாளர் பெ.மோகனை தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளோம். தமிழகத்தை பலகட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது, காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது, தி.மு.க. ஆட்சி செய்திருக்கிறது.

ஆனால் புரட்சி தலைவி அம்மா தான் பொற்கால ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கியுள்ளார் என்பதை நாமெல்லாம் நன்றாகவே அறிவோம், அம்மா 2011–ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது, ஏழை–எளிய மக்களுக்கு, அடித்தளத்தில் வாழ்கின்ற மக்களுக்கு, வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை, சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நல்ல பல திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலை நோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் உள்ள சிறப்பான திட்டங்களை அம்மா மக்களுக்கு தந்தார்.

குடிசைகள் இல்லாத தமிழகம்

தமிழகத்தில் ஏழை, எளிய குடிசை வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரிட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரிட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2023–க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற தமிழ்நாட்டை உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

புரட்சி தலைவி அம்மா தொலைநோக்கு திட்டமாக 2023–ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். நான்கு வருடங்களாக தொடர்ந்து தமிழ் மாநிலம் அகில இந்திய அளவில் நெல் உற்பத்தியில் முதல் மாநிலமாக திகழ்வதால், இதற்காக மத்திய அரசால் கிருஷ் கர்மா விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்மா ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்தையும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரமாகவும் ஆகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார். மீண்டும் தமிழகத்தில் 2016–ம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மாவின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

பேறு கால நிதிஉதவி

பேறுகால நிதிஉதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்தது 2016–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார், இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.

மேலும் பெண்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, மீண்டும் வீட்டில் பிள்ளைகளை பராமரிப்பது போன்று ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு, அதுவும் தமிழகத்தில் நிறைய தாய்மார்கள் நிறைய உள்ளனர் என்பதால் அம்மா அரசின் சார்பாக, பெண்களின் சுமையை குறைப்பதற்காக 5 ஆண்டு காலமாக விலையில்லா அரிசி வழங்கி குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான நல்ல திட்டங்களை அம்மா தமிழகத்தில் செயல்படுத்தியுள்ளார், அதை தொடர்ந்து நாங்கள் குறைக்காமல் மேலும் அதிகமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அம்மா ஸ்கூட்டர்

அம்மாவின் ஆட்சியில் உழைக்கும் மகளிர்களுக்கு பணிக்கு சென்று வருவதற்கு ஏதுவாகவும், பிள்ளைகளை பள்ளி அழைத்து சென்று வருவதற்கு ஏதுவாகவும் மானிய விலை அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் நிறைவேற்றினார். இத்திட்டத்தினை அம்மாவின் வழியில் நடக்கும் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டுவருகிறது. இந்த இடைத்தேர்தலில் எதிர்கட்சியினை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன், எதிர்கட்சியான நீங்கள், ஆளுங்கட்சியாக இருந்த போது மக்களுக்காக என்ன நல திட்டங்களை கொண்டுவந்தீர்கள், ஒன்று செய்யவில்லை, ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறார், அண்ணா தி.மு.க. ஆட்சி இந்த தேர்தலுடன் காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

1972–ம் ஆண்டு முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் அண்ணா தி.மு.க.வினை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் மாபெரும் தொண்டர்களின் இயக்கமாக உருவாகியுள்ளது. புரட்சித்தலைவி அம்மா 28 ஆண்டுகாலமாக இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து, பல சோதனை, வேதனைகளை கடந்து இந்த இயக்கத்தினை நடத்தி, அம்மாவால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்களின் எஃகு கோட்டையாக உள்ளது, கருணாநிதி மற்றும் கூட்டாளிகளும் கூட்டு சேர்ந்து அண்ணா தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

அத்தகைய ஆட்சியை, எந்த சுனாமி வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாதவாறு உள்ளது.

அண்ணா தி.மு.க.வுக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. 28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அண்ணா தி.மு.க. திகழ்கிறது. ஸ்டாலின் அவர்களே, உங்கள் தந்தை கருணாநிதியாலேயே முடியவில்லை, உங்களால் முடியுமா? இ.பி.எஸ்.– ஓ.பி.எஸ். தமிழ்நாட்டினை தீ வைத்து கொளுத்த போவதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். நாங்கள் என்ன தீப்பந்தம் கடையா வைத்திருக்கிறோம்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி 3 நபர்கள் உயிரிழந்தார்கள், அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள், மதுரையில் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார்.

இப்போது எதிர்கட்சிக்காரர்களாக இருப்பவர்கள், பிரியாணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டாமா? காசு கேட்டா குத்து, குத்துன்னு குத்தராங்க, இவ்வாறு வன்முறை கட்டவிழ்த்துவிடுவதில் திறமையான ஒரே கட்சி திமுக தான், இதுதான் திமுக ஆட்சியின் லட்சனம், தி.மு.க. ஆட்சியில் நில உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலங்களை அபகரித்ததை, அம்மா ஆட்சியேற்ற பிறகு அந்நிலங்களை மீட்டு அந்தந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, தமிழகமே இருளில் மூழ்கியிருந்தது, அனைத்து மாவட்டங்களிலும் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. ஐந்து ஆண்டுகளாக மின்சாரம் தட்டுப்பாட்டை தீர்க்கவே முடியவில்லை, அப்போது தி.மு.க. ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீரசாமி, அப்போதே 2010–ம் ஆண்டு கடைசியில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவில்லையென்றால் அதற்கு மின்சார தட்டுப்பாடு தான் ஒரே காரணமாக இருக்கும் என்று அன்றே கணித்துள்ளார். அதன் பிறகு அவர்களால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. பாவம் அவருக்கு, அன்றே அது தெரிந்துள்ளது.

ஸ்டாலின் கனவு பலிக்காது

அம்மா ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரிமாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்ருக்கிறோம்.

2016–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 32 ஆண்டுகள் கழித்து அம்மாவின் அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரிந்துள்ளார், ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், அவரால் ஆகமுடியுமா, முடியவே முடியாது, அவரோடு இன்னோருவர் ஒருத்தர் சேர்ந்துள்ளார், 32 ஆண்டுகள் அம்மாவோடு இருந்து, அம்மாவை காப்பாற்ற முடியாத துரோகிகள், தனிகட்சி ஆரம்பித்தார்கள், அணியல்ல, பிணி, பிணியல்ல, சனி, சனியெல்லாம் போய்ட்டு நாம் சுத்தமாக இருக்கிறோம், அந்த துரோகி கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்று ஒருவர் இருக்கிறார், தி.மு.க.வுடன் சேர்ந்து அண்ணா திமுக ஆட்சியை கலைக்க போறாராம், நம்ம கூட இருந்து ஆண்டு அனுபவித்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு இப்போது பேசுகிறார்,

அண்ணா திமுக ஆட்சியை 100 ஆண்டு என்ன, 1000 ஆண்டு ஆனாலும் அழிக்க முடியாது என அம்மா சூளுரைத்து சென்றுள்ளார். அம்மா, திமுக கட்சியை, எந்த காலத்திலும் வேரூன்ற கூடாது என்று தாரகமந்திரமாக கொண்டிருந்தார். ஸ்டாலினும், தினகரனும் கூட்டு சேர்ந்து மக்களை ஏமாற்றி கழுத்தை அறுத்துவிடுவார்கள் நம்பவே, நம்பாதீர்கள்,

ஒட்டப்பிடாரம் மக்களாகிய நீங்கள், வருகின்ற 4 தொகுதிகளின் சட்டமன்ற இடைத் தேர்தலில் யார் ஆட்சியில் நல்ல திட்டங்களையும் தந்தார்கள், சமூக பாதுகாப்போடு நிறைவான திட்டங்களையும் தந்தார்கள், யார் நல்லாட்சி வழங்கினார்கள் என்று எண்ணிப் பார்த்து, நீதிபதிகளாக செயல்பட்டு நல்ல தீர்ப்பை வழங்கி, வருகின்ற சட்டமன்ற இடைத் தேர்தலில், 4 தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் பெ.மோகனை வெற்றி பெற வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு உங்களது பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர். காமராஜ், கடம்பூர் செ. ராஜூ, டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், வி.எம். ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, கழக அமைப்புச் செயலாளரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான என். தளவாய்சுந்தரம், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *