செய்திகள்

ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: யூ–டியூபர் சாட்டை துரைமுருகன் கைது

கன்னியாகுமரி, அக். 11–

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், விடுதலைப் புலிகள் குறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், காங்கிரஸ் கட்சி குறித்தும், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது தி.மு.க.வினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருநெல்வேலி அருகே சாட்டை துரைமுருகன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 25–ந் தேதிவரை அவரை சிறையில் அடைக்க பத்மநாபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *