போஸ்டர் செய்தி

ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்

சேலம், ஏப்.14–
இந்த தேர்தலுக்குப் பின் எனது வாழ்க்கை கிழிந்து விடும் என்பதா? தேர்தலுக்கு பின்பு தான் எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.
நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் முழு வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.
சேலம், கோட்டை மைதானத்தில் இன்று (14–ந் தேதி) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும் போது, ‘இந்த தேர்தலுக்குப் பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழிந்து விடும்” என பேசியிருக்கிறார். நான் இந்த நேரத்தில் சவாலாக சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த தேர்தலுக்குப் பின்புதான் இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை துவங்கும்” என தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலி கனவிலே இருக்கிறார். அது ஒருபோதும் நிறைவேறாது. முதலமைச்சர் பதவி என்பது, மக்களால் அளிக்கப்படுகின்ற பதவி. அந்த பதவியை உங்களுக்கு தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. நான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
22 சட்டமன்ற தொகுதியிலும்
வெற்றி
நடைபெறுகின்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றிருக்கிறது. 39 சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார். அந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ரூ.484 கோடியில் பாலங்கள்
சேலம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக சரவணன் போட்டியிடுகிறார். தமிழகத்திலேயே சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்ற பெருமையை ஏற்படுத்திட வேண்டும். சேலம் மாவட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவின் எஃகு கோட்டையாகும். அம்மா இருக்கும்போதே சேலம் 5 ரோடு சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலம், நாலுரோடு சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், திருவாகவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இருபாலை சந்திப்பு, கந்தம்பட்டி சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.484 கோடி மதிப்பில் பல்வேறு பாலங்கள் கட்ட அனுமதி அளித்தார்.
அந்தப் பாலப்பணிகள் எல்லாம் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தபணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு நகரமாக, சேலம் மாநகரம் உருவாக்கப்படும்.
ரூ.320 கோடியில்
குடிநீர் திட்டம்
சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்திலே கொண்டு சுமார் ரூ.320 கோடி மதிப்பில் தனிக்குடிநீர் திட்டம் அம்மாவால் செயல்படுத்தப்பட்டது.
பல்வேறு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மாவால் சேலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின் கீழ் 17 பசுமை வெளி பூங்காக்கள் ரூ.8 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீடற்றோருக்கான இரவு நேர தங்கும் விடுதிகள் 5 கட்டித்தரப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட எடப்பாடி கொங்கணாபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், நரசிங்கபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஓமலூர் – மேச்சேரி, பவானி மேச்சேரி சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அமைக்கப்படும்.
சேலம் மாநகராட்சி ஸ்மார் சிட்டி திடத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ரூ.900 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சேலம் மாநகரம் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற நவீன நகரமாக உருவாக்கப்படும். பெத்தநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. கருமந்துரை, கொங்கணாபுரத்தில் புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடியில் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் சேலம் மாநகரில் நவீன மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் புதிய பஸ் போர்ட் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். சேலம் இரும்பாலை அருகே ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய இருக்கிறது.
இந்த தொழிற்சாலை உருவாகும் போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மேட்டூர் அணை
தூர்வாரல்
83 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை அம்மாவுடைய அரசால் தூர்வாரப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. தேவையான பகுதியில் விவசாயிகள் நலன் கருதி தடுப்பணைகள் கட்டப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படும் ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் சரவணனுக்கும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் காளியப்பனுக்கும் இரட்டை இலை சின்னத்திலும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்திலும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் சுதீஷ்க்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அனைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *