செய்திகள்

ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

‘தெர்மல் ஸ்கேனர்’ அதிக விலை கொடுத்து வாங்கியதாக கூறுவதை நிரூபிக்க தயாரா?

ஆதாரத்துடன் நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக வேண்டும்

ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

‘புழுதிவாரி தூற்றி மக்கள் மனதில் சகுனி, சாத்தானாக இருக்கிறார்’ என தாக்கு

 

சென்னை, ஜூன் 25–

‘தெர்மல் ஸ்கேனர்’ அதிக விலை கொடுத்து அரசு வாங்கியதாக கூறுவதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா? என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டார்.

நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டே விலக வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ குழு தமிழக அரசின் நடவடிக்கைகளை பல்வேறு நிலைகளில் பாராட்டியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர்மட்ட அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடியார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்.

அவதூறு அறிக்கை

ஏதோ ஓரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட பொய் புரட்டிலான செய்தியை திருவாளர் துண்டுச்சீட்டு உண்மை என நம்பிக்கொண்டு அவர்கள் எடுத்த வதந்தி வாந்தியை இவரும் தன் வாயால் கொப்பளித்து துப்பி இருக்கிறார். இதே பத்திரிக்கை தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கருவின் குற்றம் என்று கவிதையெல்லாம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தனது தந்தையையே தரமில்லாமல் விமர்சித்த நாளிதழில் வந்த பொய்ச் செய்தியை உரசிப்பார்த்து, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவதூறு அறிக்கையை தன் பெயரில் மறுபிரசுரம் செய்திருக்கிறார். இதுதான் இலக்கணம் என்று வரையறுக்க முடியாத அளவில் உலகெங்கும் பரவி ஒட்டுமொத்த மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அயராது போராடிக் கொண்டிருக்கின்றன.

தெர்மல் ஸ்கேனர் விலை என்ன?

தெர்மல் ஸ்கேனர் ஒவ்வொன்றையும் ரூ.9,175 கொண்டு வாங்கியிருப்பதாக எம்.ஆர்.பி. விலையை பார்த்துவிட்டு மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்த மு.க.ஸ்டாலின் உண்மையாக அரசு என்ன விலை கொடுத்து வாங்கி இருக்கும் என்பதனை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் எனக்கு தெரியாது என்று தனக்கு முன்னால் இருப்பவர் எழுதிய விடையை பார்த்து தனக்கு தெரியாது என்று எழுதினாராம் ஒரு காப்பியடி திலகம். அதுபோலவே ஒரு நாளிதழின் பொய்ச் செய்தியை நம்பி மு.க.ஸ்டாலின் ரூ.9,175 மதிப்பிற்கு தெர்மல் ஸ்கேனர்களை வாங்கியதாக சென்னை மாநகராட்சியின் மீது அவதூறாக பழி போட்டிருக்கிறார். உண்மையில் தெர்மல் ஸ்கேனரானது ரூ.1,765 + 18 ரூ ஜிஎஸ்டி வரி விதிப்புடன் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வீடுகள்தோறும் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் பொதுமக்களிடையே உள்ளனவா என கண்டறிய 12 ஆயிரம் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, நாள்தோறும் அவர்களின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று இது தொடர்பான கணக்கெடுப்பு தொடர்ந்து 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

குறைந்த விலையில்…

இப்பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, சுமார் 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தங்களுடைய அறிக்கையில் தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச விலை ரூ.9,175 எனவும், மொத்தமாக கொள்முதல் செய்தால் ரூ.4,000 முதல் ரூ.6,000 என்ற அளவில் வாங்க முடியும் எனவும், மேலும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே கிடைக்கின்றன எனவும், ஆன்லைன் மூலமாக ரூ.1,500 முதல் ரூ.4,000 வரை தெர்மல் ஸ்கேனர்கள் பல மருத்துவமனைகளில் வாங்கி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விலைகளை விட குறைவான விலையில் அதாவது ரூ.1,765 + 18ரூ ஜிஎஸ்டி வரி விதிப்புடன் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அறிக்கை வெளியிட்ட தங்களுக்கும் அறிக்கையை தயார் செய்து கொடுத்தவருக்கும் துளி அளவும் அடிப்படை அறிவு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சவால்

மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேசவேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழு மனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இன்றே மு.க.ஸ்டாலினும் ராஜினாமா செய்யவேண்டும்.

நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் தி.மு.க. தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போகவேண்டும். நிரூபித்தால், மீன்வளத்துறை அமைச்சராகிய நான் அமைச்சர் பொறுப்பு உட்பட அனைத்து அரசியல் பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார்.

இந்த தெர்மல் ஸ்கேனர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் இருப்பதை அறியாமலும், ஒரு சில பொதுமக்கள் காய்ச்சலை வெளியே சொல்ல அச்சப்படுவதாலும் அவர்களிடமிருந்து கண்டறிவது மிகவும் கடினமாக இருப்பதால் இவற்றைக் கொண்டு களப்பணியாளர்கள் மூன்றடி தூரத்தில் இருந்தே ஒருவருடைய உடல் வெப்பநிலையை கண்டறிய முடியும் என்ற காரணத்தினாலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தெர்மல் ஸ்கேனர் வாங்கிய ஒருவாரக் காலத்தில் தினமும் 10 லட்சம் வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடையே கணக்கீடு எடுக்கப்பட்டு, அதில், இதுவரை (1 வாரத்தில்) 1.5 லட்சம் மக்கள் உடல்வெப்பநிலை சற்று அதிகமாக இருந்த நிலையில் அவர்கள் காய்ச்சல் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதிலிருந்து, 49,638 பேருக்கு காயச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் 8,302 நபர்களுக்கு மேல்பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீடுகள் தோறும் சென்று….

இதுபோன்று வீடுகள் தோறும் சென்று கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் உள்ளனவா என்று கண்டறியும் திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சிதான் செயல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு என்ற செய்தியை வெளியிட்ட செய்தித்தாள் இன்று மாநகராட்சியின் விளக்கத்தையும் அதிலுள்ள உண்மைகளையும் மறுப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சரின் ஆலோசனையின்படி அம்மாவின் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் நலத் திட்டங்கள் மற்றும் சிகிச்சைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக பாதிக்கப்பட்ட நபர்களில் 54 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருந்தாத தீய சக்திகள்

ஏற்கனவே நடக்காத டெண்டரில் முறைகேடு என்று முதல்வர் மீதும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மீதும் வீண்பழி சுமத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுத்தியால் ஓங்கி உச்சந்தலையில் அடித்த அடியில் விளம்பரத்திற்காக போட்ட வழக்கை விழுந்தடித்துக் கொண்டு திரும்பி பெற்ற திமுக உலகத்தின் முன் மூக்கறுபட்டு நின்றது. இந்த நிகழ்வு நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே அடுத்த அவதூறை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இருக்கிறார் என்றால் அம்மா சொன்னதைப்போல இவர்கள் ஒரு நாளும் திருந்தாத தீயசக்திகள் என்பது உறுதியாகிறது.

பெருந்தலைவர் காமராஜர் குடியிருந்த வாடகை வீட்டை ஏழைப்பங்காளனின் மாளிகையை பாரீர் என்று அன்று அவதூறு பரப்பி கர்மவீரர் மீது பழி போட்டவர் தான் கருணாநிதி, அதேபோல அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் புரட்சித்தலைவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்த நிலையில் அவர் ஐஸ் பெட்டியில் உறங்குகிறார் என்று நா கூசாமல் பொய் சொல்லிவிட்டு ஆட்சியை ஒருமுறை என்னிடம் கொடுங்கள். ஒருவேளை புரட்சித்தலைவர் உயிருடன் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை திரும்ப ஒப்படைத்து விடுகிறேன் என்று அரசியல் எதிராளி இடமே அரசியல் பிச்சை எடுத்த கட்சிதான் திமுக.

பொய் உருண்டை

இப்படிப்பட்ட இவர்களிடமிருந்து நியாய தர்மத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். இவர்கள் விடுக்கும் அறிக்கையை கடை வீதிகளில் விற்கப்படும் பொரி உருண்டை போல இது பொய் உருண்டை என்று தூக்கி எறிந்து காரி துப்பி விட்டு கடந்து போவார்கள் என்பது சத்தியம்.

ஆனால் ஒன்று பாண்டமிக் என்று உலகத்தால் அறிவிக்கப்பட்டு ஒரு பேரழிவு தொற்று நோய்க்கு எதிராக உலகமே போராடுகின்ற நிலையில் அரசியல் அதிகார பித்து பிடித்து பிறர்மீது உண்மைக்குப் புறம்பான பழிகளை சுமத்த மனசாட்சி துளியும் இல்லாமல் செயல்படுகின்ற இவர்களை மக்கள் மனித பிழை என்றே கருதுவார்கள்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதற்காக எந்த ஒரு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத, களத்திற்கு வராமல் நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு அறிக்கை மட்டுமே வாசிக்கும் உங்களுக்கு அரசின் பணிகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

எந்த ஒரு செய்தி குறித்தும் எள்ளளவும் சுய அறிவு இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துவரும் பல்வேறு சிறப்பு பணிகள் குறித்து சிறு சிறு காகிதங்களில் குறிப்புகளாக எழுதி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய சுய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுமையாக இந்தத் துண்டு சீட்டுகளை படித்து அவற்றின் மூலம் அம்மாவின் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு பின்னர் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புழுதிவாரி தூற்றுவதா?

வரலாற்றில் நல்ல ஒரு அரசின் செயல்பாடுகளை போற்றிப் புகழ்ந்து பாடிய புலவர்களும் உண்டு. நல்ல அரசுகளின் மீது புழுதிவாரி தூற்றி பாடிய புலவர்களும் உண்டு. மக்கள் பணியில் அர்ப்பணிப்போடும் சிறப்போடும் செயல்பட்டுவரும் ஒரு அரசின் மீது புழுதிவாரி தூற்றிய புலவர்கள் மக்கள் எண்ணங்களில் சகுனிகளாகவும், சாத்தான்களாகவும் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை.

உலகமெங்கும் வாழும் 8 கோடி தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் எல்லாம் குடிகொண்டிருக்கும் அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் மீது புழுதிவாரித் தூற்றி பொதுமக்களிடையே சகுனியாகவோ அல்லது சாத்தானாகவோ எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் இனிமேலாவது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இப்படிப்பட்ட ஒரு மருத்துவ பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பணியாற்றிட முன்வர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *