செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளி உறுப்புகள்‌ தானம்‌

சென்னை, ஜன. 9–

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளியின்‌ உறுப்புகள்‌, அவர்களது குடும்பத்தினரால்‌ தானம்‌ செய்யப்பட்டது.

சென்னை புழல்‌, என்எஸ்கே தெருவை சேர்ந்த பத்மா (வயது 42) 100 நாள்‌ வேலை செய்து கொண்டு வீட்டை பராமரித்து வந்தார்‌. இவரது கணவர்‌ பிரேம்குமார்‌ (வயது 53) மற்றும்‌ மகன்‌ ரித்திக்‌ ஜாய்‌ (வயது 14) அனைவரும்‌ சேர்ந்து வசித்து வந்தனர்‌.

கடந்த 4.1.24 பிற்பகல்‌ 2.40 மணியளவில்‌ தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று இரு சக்கர வாகனத்தில்‌ திரும்பி வரும்‌ வழியில்‌ மழை பெய்து வந்த நிலையில்‌ குடை பிடித்து வரும்‌போது, காற்று வீசியதில்‌ குடை பின்‌ இழுக்கப்பட்டு இரு சக்கர வாகனத்தில்‌ இருந்து மேல்‌ காலனி என்ற இடத்தில்‌ கீழே விழுந்ததில்‌ தலையில்‌ காயம்‌ ஏற்பட்ட நிலையில்‌ வீட்டிற்கு சென்று விட்டார்‌. பிறகு தலைவலி மற்றும்‌ ரத்த வாந்தி எடுத்ததால்‌ அருகில்‌ உள்ள ஏஎன் குப்பம்‌ அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. பின்னர் உயர்‌ சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ அன்று மாலை 5.10 மணியளவில்‌ அனுமதிக்கப்பட்டார்‌. உடனடியாக சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில்‌ மூளையில்‌ ரத்தக் கசிவு இருப்பதை கண்டுபிடித்து உடனே அறுவை சிகிச்சையும்‌ நடைபெற்றது. மேலும்‌ அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ அனுமதிக்கப்பட்டார்‌. சிகிச்சை பலனின்றி (6ந் தேதி) இரவு 11.24 மணிஅளவில்‌ மூளைச்சாவு அடைந்தார்‌.

அவரது உறவினர்களின்‌ முழு சம்மதத்துடன்‌ பத்மா உடலில்‌ இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல்‌, இரண்டு சிறுநீரகம்‌, இருதய வால்வு, இரண்டு கண்கள்‌ மற்றும்‌ தோல்‌ என மொத்தம்‌ 7 உறுப்புகள்‌ அரசு விதிமுறைப்படி பதிவு செய்த நோயாளிகளுக்கு தமிழக அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின்‌ வழியாக பதிவு செய்து காத்திருக்கும்‌ தேவையான நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

ராயபுரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ ஜட்ரீம்‌ ஆர்‌.மூர்த்தி மற்றும்‌ மருத்துவமனை டீன்‌ டாக்டர் பி.பாலாஜி மருத்துவ கண்காணிப்பாளர்‌, ஆர்‌எம்‌ஓ, பேராசிரியர்கள்‌, உதவிப்‌ பேராசிரியர்கள்‌, செவிலியர்‌ கண்காணிப்பாளர்கள்‌, நிர்வாகப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ உடல்‌ உறுப்புகளை தானம்‌ செய்த நோயாளிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்‌.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *