சிறுகதை

ஷேர் ஆட்டோ | ராஜா செல்லமுத்து

பிதுங்கி வழியும் தார் சாலைகள் நோய்க் காலங்களில் சற்று குறைவாகவே இருந்தது.

இப்போது மறுபடியும் சாலை முழுவதும் சாரை சாரையாய் வாகனங்கள். முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி இருக்க வேண்டும். வெளியில் சென்று வந்தால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் உத்தரவு பிறப்பிக்கிறது .

ஆனால் இதையெல்லாம் நாம் செய்கிறோமா? என்றால் அத்தனையும் கேள்விக்குறிதான். தனக்கு வராத வரை எதுவும் ஆபத்து இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

இந்த வரையறைக்குள் வராத மனிதர்கள், எத்தனையோ பேர் இங்கு இருக்கிறார். முகமூடி போட்டா நோய் வராதா? நமக்கு ஒன்னு வரனும்னு இருந்தா வரத்தான் செய்யும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று வியாக்கியானம் பேசுவார்கள் சில அவசர அறிவாளிகள். அந்த அச்சில் வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றி வந்தான். அது ஒரு ஷேர் ஆட்டோ

பின்னால் 4 பேர். அதன் அருகே இருக்கும் ஒரு சீட்டில் ஒருவர் .அதையும் தாண்டி ஓட்டுனரின் இடப்பக்கமும் வலப்பக்கமும் ஓட்டுநரை பிடித்துக்கொண்டே இரண்டுபேர் அமர வைத்துக்கொண்டு எந்த சமூக இடைவெளியோ, முகத்தில் முக கவசம் எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் .

பின்னால் அமர்ந்திருந்த ஜெயக்குமார், ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தச் சொன்னான்.

ஏன் இங்க நிறுத்த சொல்றீங்க? என்று ஓட்டுநர் கேட்டான் .

நான் அடுத்த ஆட்டோல வாரேன் என்று ஜெயக்குமார் சொன்னான்.

என்னாச்சு? என்று ஓட்டுனர் கேட்டான்.

இந்த ஆட்டோவுல சமூக இடைவெளி, முகக் கவசம் எதுவுமே இல்லை .நீங்க பாட்டுக்கு ஏத்திகிட்டு போறீங்களே. ஏ… இது நல்லா இருக்கா என்ன என்று கோபித்துக் கொண்டு ஆட்டோவை விட்டு கீழே இறங்கினான்.

சார்…. உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று ஓட்டுனர் கேட்டான்.

நீ தான் என் பிரச்சனை என்று ஜெயக்குமார் சொல்லியபடியே இறங்கினான்.

உனக்கு பத்து ரூபா கிடைக்கும் என்பதற்காக , இடது பக்கமோ வலது பக்கமும் ஆட்களை உட்காரவைத்து, கீழே பின்னால் சீட்டில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஏத்துற? ஏற்றிய எந்த ஆளும் முகக் கவசம் போடுவதில்லை.அப்படியே உட்காந்தருக்காங்க. சமூக இடைவெளி எதுவும் இல்லை என்று ஜெயக்குமார் ஆட்டோகாரனிடம் சொன்னான்.

இது தப்பா என்ன ? நீங்க உட்காருங்க என்று சொன்னான்.

என்னால இந்த ஆட்டோவுல வரமுடியாது. உனக்கு பத்து ரூபா இருபது ரூபா வருமானம் வருமானத்துகாக மக்களை நோயாளியாக பாக்குறியா? இந்த ஆட்டோவிலிருந்து யாருக்கோ நோய் வந்தா அவங்க எங்கங்க போறாங்களோ? அங்க எல்லாம் நோய் காட்டுத்தீ மாதிரி பத்திக்கிரும். இது தெரியாம நீ பேசாம இவங்கள இப்படி உட்கார வச்சுட்டு வர்ரே. உனக்கு சமூக அக்கறை ஏதாவது இருக்கா? உனக்கு பணம் சம்பாதிக்கணும் அது மட்டும் தான் குறிக்கோள். தப்பு நான் வர்றேன் என்று ஜெயக்குமார் சொன்னான்.

அந்த ஷேர் ஆட்டோவில் இருந்த ஆட்கள் ஜெயக்குமார் சொன்னது சரிதான் என்று ஆட்டோவை விட்டு கீழே இறங்கினார்கள்.

என்ன எல்லாரும் கீழே இறங்கிட்டிங்க ? என்று ஓட்டுனர் கேட்டார்.

இவர் சொல்றது சரிதான். இந்த ஷேர் ஆட்டோல சமூக இடைவெளி இல்லை. யாரும் முகக் கவசம் போடல. அதனால நாங்களும் ஆட்டோ விட்டு இறங்குறம் என்று சக பயணிகள் இறங்க ஆட்டோ காரனுக்கு புத்தியில் சுரீர் என்று உறைத்தது.

அதிகமாக ஏறிய ஆட்களை இறக்கிவிட்டு விட்டு முகக் கவசம் அணிந்த ஆட்களை மட்டுமே வண்டியில் ஏற்றினார்.

அதுமட்டுமில்லாமல் அவரின் இடது பக்கம், வலது பக்கம் என்று எந்த ஆட்களையும் அமர வைக்க வில்லை .

இப்போது அவரும் முக கவசம் அணிந்து இருந்தார்.

அந்த ஷேர் ஆட்டோ சுகாதாரத்தோடு சாலையில் சென்று கொண்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *