டாக்கா, ஜன. 07–
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, ஏற்கனவே பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 வது முறையாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏராளமானோர் காணாமல் போன வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கைது உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கைது செய்ய உத்தரவு
மர்மமான முறையில் ஏராளமானோர் காணாமல் போக காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாணவர் போராட்டம் தொடர்பான வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வங்கதேச விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் போராட்டம் தீவிரமானதால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.