சென்னை, பிப்.6–-
வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-
விவசாய பெருமக்களுக்காக தனது உயிரையே தந்து உழைத்த உத்தமராம் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தைப் போற்றுகிறேன். 1925-ம் ஆண்டு பிறந்த நாராயணசாமி நாயுடு, 1984-ம் ஆண்டு தான் மறையும் வரையிலும், தனது வாழ்க்கையை விவசாயிகளுக்காகவே அர்ப்பணித்தவர்.
விவசாயிகளின் உரிமைக்குப் போராடும் சமூக விவசாயியாக வலம் வந்த அவர், விவசாயிகள் தனித்தனியாக இருப்பதை விட அமைப்பாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்காக உழவர் அமைப்பைத் தொடங்கினார்.
1968-ம் ஆண்டில் கோவை வட்ட உழவர் இயக்கம் தொடங்கிய அவர், பின்னர் அதை கோவை மாவட்ட இயக்கமாக மாற்றி, 1970-ம் ஆண்டு தமிழக உழவர் இயக்கமாக அதனை விரிவுபடுத்தினார். அதன் பிறகு 15 ஆண்டுகள் உழவர் உரிமைக்காகப் போராடியும், வாதாடியும் அதன் மூலமாக வெற்றி பெற்றும் காட்டினார்.
விவசாயிகள் நலனே தனது வாழ்வு என வாழ்ந்த நாராயணசாமி நாயுடு, 21.12.1984 அன்று கோவில்பட்டியில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிவிட்டு ஓய்வெடுத்தபோது, படுக்கையிலேயே மரணம் அடைந்தார்.
தனது வாழ்வின் இறுதிநாள் வரையிலும் விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக உழைத்த நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில், அவரது பெருவாழ்வைப் போற்றும் வகையில், துடியலூர்-கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரெயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பதையும், அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.