செய்திகள்

வைகை ஆற்றில் கம்பீரமாக இறங்கிய கள்ளழகர்

மதுரை, ஏப். 16–

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று காலை நடைபெற்றது.

இதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்குப் புறப்பட்டார். அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று  இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு அழகர் வந்தார். பின்னர் இரவு 12 மணி அளவில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார்.

பச்சைப் பட்டு
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.  

காலை 6.20 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில்  எழுந்தருளினார்.  வண்டியூர் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதைக் காண குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோசமிட்டும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  
சுமார் 4,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப் பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published.