சிறுகதை

வைகாசி நிலவே – ராஜா செல்லமுத்து

வெந்து புழுங்கும் வெயில் நேரத்தில் மாலை நேரம் வந்தால் போதும் மகேந்திரன் மொட்டைமாடியில் உலா வருவது வழக்கம்.

காலையிலிருந்து மாலை வரை வெயிலில் வெந்த அந்த மொட்டைமாடி, இப்போது தான் ஆறிக்கொண்டிருந்தது

மகேந்திரன் கால் வைக்க உஷ் என்று சத்தமிட்டான்

என்ன மாதிரி வேகுது என்று நினைத்தவன் தண்ணி ஊத்தினா நல்லா இருக்கும் போல என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தண்ணீரை பிடித்து மொட்டை மாடி முழுதும் ஊற்றி விட்டான்.

அதுவரை பாலுக்கு அழும் பிள்ளை போல வெயிலில் தவித்துக் கிடந்த அந்த மொட்டைமாடியின் கற்கள் தண்ணீர் ஊற்றவும் உர்ரென்று உறிஞ்சி ஆவியை வெளியேற்றியது.

சிறுது நேரம் காலாற நடந்தான். ஊரடங்கு உத்தரவு என்பதால் இப்போதெல்லாம் அவன் பூங்காக்களில் நடை பயணம் மேற்கொள்வதில்லை . மொட்டை மாடி தான் அவனுக்கு எட்டு போடும் பூங்கா.

காலை மாலை என்று உடற்பயிற்சிக் கூடமாக மாறி இருந்தது அவனின் மேல் மாடி . வழக்கம் போல அன்றும் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தான்.

நடந்து கொண்டிருக்கும் போதே இளையராஜாவின் பாடல்கள் அவன் காதுகளை கெளரவிக்கும்.

என்ன மனுஷன்யா இப்படி பாட்டு போட்டுருக்காரு ஒவ்வொரு பாட்டும் முத்து முத்தா இருக்கு என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு பாடலையும் ரசித்து கேட்டுக் கொண்டே போவான்.

சில நேரங்களில் நண்பர்கள் செல்போன்களில் பேச்சு என்று அதையும் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருப்பான்.

இந்த ஊரடங்கு காலத்தில் அவன் அதிகம் இருப்பது மொட்டை மாடியில் தான்.

அது ஒரு வாடகை இல்லாத வாசஸ்தலம். சுற்றிலும் மரங்கள் அந்த மரங்களிலிருந்து வரும் காற்று அவனை வருடிச் செல்லும் போது அவ்வளவு இன்பம் அவனுக்குள் வியாபித்திருக்கும்.

அன்று நண்பர் ஒருவருடன் பேசி முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் இருந்தான் மகேந்திரன்.

அப்போது எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்டது.

வைகாசி நிலவே…. வைகாசி நிலவே என்ற அந்த ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப ஒரு பெண்ணின் குரல் பாடிக் கொண்டிருந்தது.

என்ன இது? பழைய ரிகார்டு மாதிரி ஒரே ஒரு வரிய திரும்பத் திரும்ப யார் பாடுறது? என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

பாடும் குரலின் உருவம் அவனுக்கு தெரியவில்லை . முன்பக்கம் பின்பக்கம் இருக்கும் மாடிகளைப் பார்த்தான் ; அப்போதும் தெரியவில்லை.

ஆனால் குரல் மட்டும் வந்தவண்ணம் இருந்தது.

யாராக இருக்கும் என்று கொஞ்சம் சற்று யோசித்துப் பார்க்கும்போது பக்கத்து மாடியில் இருந்து ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அந்த ஒரு வரியை மட்டுமே திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்தாள்..அது எதற்காக என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும் மகேந்திரனுக்கு தெரியாது.

அவன் மாடியில் நடையை கொஞ்சம் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அந்த ஞானத்தின் கீதம் அவன் காதுகளில் தேனாய் விழுந்து கொண்டு இருந்தது.

ஆனால்…

திரும்பத் திரும்ப அந்த ஒரே வரி மட்டும் தான் அவன் காதில் வந்து விழுந்து கொண்டிருந்தது.

என்ன இது ? இவளுக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சுருக்கா? ஒரே ஒரு வரிய மட்டும் ஏன் பாடிட்டு இருக்கா. அந்தப் பெண்ணிடமே கேட்கலாமா? என்று அவன் என்று எத்தனித்தபோது…

அது நாகரீகம் அல்ல அறிமுகமில்லாத பெண்ணிடம் எப்படி கேட்பது? என்று வாய்க்குள் அந்த வார்த்தையை உதடுகளுக்குள் குவித்து வைத்துக் கொண்டான்.

எப்படி கேட்பது? என்று அவனுக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது.

அந்த ஒற்றை வரியை ஓராயிரம் முறை பாடியிருப்பாள். ஆனால் அந்தப் பாடல் வரியின் அர்த்தம்என்ன பண்ற அவள் யாருக்காக பாடுகிறாள் என்பது மகேந்திரனுக்கு தெரியாது. ஒரு வினா அவன் இதயத்தில் நிமிர்ந்து நின்றது .

சிறிது நேரம் அதே குரல் ,.அதே ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அதற்குள் ஒரு போன்கால்

நான் மொட்டை மாடியில் தான் இருக்கைன் அம்மா.

என்று அதற்கும் பதில் சொல்லிவிட்டு மறுபடியும் பாட ஆரம்பித்தாள்.

மகேந்திரனின் நடைபயணத்தில் அந்த ஒரு வரி தூக்கி நின்றது.

அவள் பாடி முடித்து சென்றுவிட்டாள்.

நடை பயணம் மேற்கொண்டிருந்த மகேந்திரன்.

இப்போது.

வைகாசி நிலவே வைகாசி நிலவே என்ற பாடலை பாட ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *