சிறுகதை

வேவு | ராஜா செல்லமுத்து

சண்முகத்தின் கம்பெனியில் ஆட்கள் நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்

ஒவ்வொருவரும் ஒரு குணம் . ஒவ்வொருவருக்கும் ஒரு நடவடிக்கை, ஒவ்வொருவருக்கும் ஒரு இங்கிதம், ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை…. என்று எப்போதும் இருப்பார்கள்.

சண்முகம் தன் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு நிறைய ஆட்களை வைத்திருந்தார்.

அதில் சீனுவும் ஒருவன். ராமுவும் ஒருவன்.

தன்னுடைய பரிவாரங்களை எல்லாம் சீனுவுக்கும் ராமுக்கும் சொல்லிக் கொடுப்பார்.

சீனு மீது ஒரு விதமான அலாதிப்பிரியம்; ராமு மீது ஒரு விதமான அலாதிப் பிரியம்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் அதை சொல்லிக் கொள்ள மாட்டார்.

இரண்டு பேருடனும் நன்றாக பேசுவதாகத் தான் தெரியும்.

ஆனால் உள்ளுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கும் சண்முகத்துக்கு.

அவரின் நம்பிக்கை குறைந்த செயல் அல்ல. யாரையும் நம்பாத செயல். அதனால் சீனுவை அழைப்பார்.

சீனு கம்பெனியின் முதலாளியே தன்னை அழைக்கிறார் என்று கை கால் புரியாமல் ஆடுவான்.

அவனை அழைத்து தோள் தடவி இனிப்பு பேச்சுக்களைப் பேசி ராமுவை கண்காணிக்க சொல்வார்.

சீனு ராமு எப்படி இருக்கான்? என்று கேட்டதும்

சீனு ராமுவைப் பற்றிய சில நிறைகளை சொல்வான். நிறைய குறைகள் செல்வான்… இதைக்கேட்ட சண்முகம்

அதனாலதான் உன்னை கூப்பிடு இருக்கேன்; அவன் இந்த கம்பெனியில் என்ன பண்றான்? என்ன செய்கிறான்? அவன நடவடிக்கை என்ன? அப்படிங்கறத நீ கவனிச்சுக்கோ சீனு என்று சீனுவிடம் ராமுவை கவனிக்கச் சொல்வார்

சண்முகம் தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ராமுவை கண்காணிக்கும் பொறுப்பை தன்னிடம் கொடுத்துள்ளதால் அவன் தலையில் கொம்பு முளைத்தது போல் அந்தக் கம்பெனியை சுற்றி வருவான்.

ராமுவை பார்த்தால் ஒரு அசட்டு சிரிப்பு. ராமுவை நிறுவனத்தின் முதலாளி கண்காணிக்கச் சொன்னதால் சீனு பெருமையாக நினைத்துக் கொள்வான்.

மற்றவர்களிடம் இல்லாத ஒரு மதிப்பு முதலாளி தன்னிடம் காட்டுவதாக அவனுக்கு ஆயிரம் இறக்கைகள் முளைத்துக்கொள்ளும். இப்படி போய்க் கொண்டிருக்கும் வேளையில் ராமுவை கூப்பிடுவார்

என்ன ராமு? எப்படி இருக்கீங்க? என்று சண்முகம் கேட்கும்போது…

நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க? என்று ஒரு நிறுவனத்தில் இருந்தாலும் கூட குசலம் விசாரிப்பது மரபு என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்.

அப்போது ராமுவிடம் சீனு பற்றி கேட்பார்:

என்ன ராம் சீனு எப்படி இருக்கான்? சீனாவைப் பற்றிய குறைவான நிறைகளைச் சொல்லும் ராமு நிறைய குறைகளைச் சொல்லி வைப்பான்

நீ என்ன பண்ற. சீனுவோட நடவடிக்கை…என்ன? இந்த கம்பெனியில் அவன் என்ன வேலை செய்கிறான்? அப்படிங்கறத நீங்க கவனிச்சக்க ராமு என்று ராமுவிடம் சீனுவைப் பற்றி சொல்லி வைப்பார்.

ஒரு பக்கம் சீனுவிடம் ராமுவை கவனிப்பதாக சொன்னவர், இன்னொரு பக்கம் ராமுவிடம் சீனுவை கவனிக்கச் சொல்லுவார்.

இந்த எதிர்மறையில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதாக நினைப்பார்கள்.

ஆனால் இருவருக்கும் என்னவென்று தெரியாது…ஒருவருக்கு ஒருவர் வேவு பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

இது இருவருக்கும் ஒருவருக்கொருவர் தெரியாது.

ஆனால் சண்முகம் ரொம்பவே புத்திசாலி. இந்த இருவரையும் ஒருவருக்கொருவர் பார்க்கச் சொன்னவர் …இந்த இருவரையும் கண்காணிக்க வேறொரு நபரை நியமித்தார்.

இருவரும் கம்பெனியில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வேறொரு நியமித்து பார்க்கச் சொன்னவர்….

இருவரையும் கண்காணிக்க நியமித்தவரை , இன்னொருவரை வைத்து வேவு பார்க்க வைப்பார்.

சண்முகத்தின் மூளை இன்னதென்று அவருக்கே தெரியாமல் இருக்கும்.

கேட்டால் ஒருவருக்கு ஒருவர் அவர்களை கண்காணிக்க வைத்தால் தான் கம்பெனியில் குறைகள் ஏதும் நடக்காது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார் சண்முகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *