செய்திகள்

வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம்

சென்னை, டிச.6–

சென்னையில், மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீர் வடியால் தவிக்கும் வேளச்சேரி, முடிச்சூர் பகுதி மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டது.

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் 3வது நாளாக வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர். உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், புழுதிவாக்கம், அரும்பாக்கம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாததால், அப்பகுதியில் உள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். குடிநீர், உணவு, பால் உள்ளிட்டவை இன்று படகு மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் உணவு

ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்திய ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

வேளச்சேரி பகுதியிலும் சூழ்ந்த வெள்ள நீரால் வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த பகுதியில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. பலர் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உட்புற பகுதிகளில் வசிப்பவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவை விநியோகம் செய்யப்பட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் நீர் ஒக்கியம் துரைப்பாக்கம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. நீர் வெளியேறாமல் உள்ளதால், உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மழை வெள்ளம் வடியாததால் மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகள் துண்டிப்பு

தென்சென்னையில் கோவிலம்பாக்கம் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை, பள்ளிக்கரணை – தாம்பரம் சாலை, மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை ஆகியன மழை காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மேற்கு தாம்பரத்தில் கன்னடபாளையம் பகுதியில் வெள்ள நீர் இன்னும் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

முடிச்சூர் வரதராஜபுரம், அமுதன் நகர் பகுதியில் வெள்ள நீர் வடியாததால் பல குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றன. குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேல்மா நகர், அம்மா நகர், அம்பேத்கர் நகர், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது.

முடிச்சூர் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிவதால் கால்வாய்களில் நீர் வெளியேறாமல் அது குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. முடிச்சூர் ஏரி, மழைநீர் வெளியேறும் கால்வாய்களை முறையாக அவ்வப்போது தூர்வாரியிருந்தால் இவ்வாறு தண்ணீர் தேங்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புயல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 5 குழுவினர் சென்னை வந்துள்ளனர். 2 குழுக்கள் வேளச்சேரி மற்றும் பள்ளிகரணை பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 3 குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி பகுதிகளில் வெள்ளம் முழுமையாக இன்னும் வடியவில்லை.

மேற்கு தாம்பரத்தில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இங்கே 3 நாட்களாக மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.

ஐடி அலுவலகம் அமைந்துள்ள தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், ஐடி ஊழியர்கள் டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் வாகனங்களில் அலுவலகம் சென்றனர்.

திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து திருவான்மியூர் வரையிலான பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அடையாறு பகுதியில் திருவிக பாலம் உள்ள பகுதி அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

கேகே நகர் பாரதிதாசன் காலனி பகுதிகளிலும் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. ராட்சத மோட்டார் மூலம் நீர் அகற்றும் பணி நடக்கிறது. இங்கு 1000 குடும்பங்கள் சிக்கியுள்ள நிலையில் அங்கு படகு மூலம் உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

வட சென்னையில், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி வெள்ளநீர் வடியாமல் உள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி மக்கள் சாலைகளில் திரண்டனர். கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் வந்த அரசு பஸ் கண்ணாடியை அவர்கள் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கினார்கள்.

போயஸ் கார்டன் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை அரும்பாக்கம் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டிலிருந்து வடபழனி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மின்சார சேவையும் மீளவில்லை. மின் நிலையங்கள் பல தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் மின் விநியோகம் படிப்படியாகவே மீட்கப்பட இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் இன்னும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *