திட்ட பங்கேற்பாளர்களுடனான கூட்டத்தை நடத்த சென்னை பெருநகர மாநகராட்சி முடிவு
சென்னை, டிச. 09–
வேளச்சேரியிலுள்ள 6 துளை கால்வாய் மேம்பாட்டு திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்பவர்களுடனான கூட்டத்தை நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் (GCC) ஆய்வு அடிப்படையில், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரியில் அமைந்துள்ள ஆறு-துளை கால்வாய் மேம்படுத்தல் தொடர்பாக பங்கெடுத்து கொள்பவர்களுடனான சந்திப்பை நடத்த உள்ளது. இதில், ஆர்வமுள்ள தனிநபர்கள், வேளச்சேரி குடியிருப்பாளர்கள் மற்றும் அரசு அல்லாத அமைப்புகள் பங்கெடுத்துக்கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது.
ரூ.15 கோடியில் திட்டம்
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநகராட்சியின் ஆய்வில், ரூ.15 கோடியில் திட்டத்தை நடைமுறைப்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீர்நிலையின் கரையில் மூங்கில் கன்றுகளை நடுதல், பொதுமக்கள் அமரும் வசதிகளை உருவாக்குதல், நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையை அமைத்தல் போன்ற திட்டங்கள் இந்த மதிப்பீட்டில் உள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வடிநீர் குழாய்களை சிமெண்ட் குழாய்களாக மாற்றுவது உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த திட்டத்திற்காக பங்குதாரர்களுடன் நடத்தப்படும் சந்திப்பில் விவாதிக்கப்படும் கருத்துக்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
“மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தாலுகாக்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்கள் குறித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வின் இறுதி முடிவுகளை, பகுப்பாய்வு செய்த பிறகு, கரையை இன்னும் மேம்படுத்தி நீர்நிலையின் கொள்ளளவை அதிகரிக்கலாம் என்றும் யோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆறு-துளை வடிகால் அருகிலுள்ள குளம் அருகே, பொதுப் பயன்பாட்டு இடங்களில் சில கட்டிடங்கள் முறைகேடாக இருப்பதையும் மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இவை அகற்றப்பட்டு, பாலத்தின் மூலம் நீர்நிலைகள் இணைக்கப்படும். வேளச்சேரி பகுதியை பொருத்தவரையில் குடியிருப்புகள், அலுவலகங்கள், போக்குவரத்து மற்றும் வணிக மண்டலங்கள் என அனைத்தும் கலந்த பகுதியாக உள்ளதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேவேளையில், சீரற்ற பசுமை, போக்குவரத்து பகுதிகளுக்கு இணைப்புகள் குறைவாக உள்ளது போன்றவை இந்த பகுதியின் தடைகளாக உள்ளது.
‘பெருங்குடி உலா’
இந்த மண்டலத்தில் அடையாளம் காணப்பட்ட மற்ற திட்டங்களில் ‘பெருங்குடி உலா’ வும் அடங்கும். இதன் மூலம் பொதுமக்களுக்கான சுற்றுச்சூழல் சார்ந்த விரைவு போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துவதுடன், ஏரிகளுடன் கூடிய குடியிருப்பு வாழ்விடங்களையும் உருவாக்கும். இந்த பாதையில் நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகள், பொது போக்குவரத்து பகுதிகள் மற்றும் நீல-பச்சை அமைப்புகள் ஆகியவை இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இது சுற்றுச்சூழல் உணர்திறன் வாழ்விடங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஏரிகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. பல்லுயிர் பெருக்கம், நீர் தக்கவைப்பு மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்த நடைபாதை மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள், பொது போக்குவரத்து பகுதிகள், பொதுத் தளம் மற்றும் தெரு மேம்பாடுகள்’, ‘200 மீட்டர் தொலைவில் பன்முக போக்குவரத்து கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல்’ ஆகியவையும் அடங்கும்.
சென்னை பெருநகர மாநகராட்சி, குறிப்பு விதிமுறைகளை உருவாக்கி, திட்டத்திற்கான நிதி முன்மொழிவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி, தென்னக ரெயில்வே மற்றும் தனியார் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகளை உள்ளடக்கிய நில உரிமை போன்ற முக்கிய அம்சங்களை இது உள்ளடக்குகிறது. அடுத்தகட்டமாக, இந்த திட்டத்தின் பங்குதாரர்களுடைய ஆலோசனைகளின் உள்ளீடுகள் மற்றும் திட்டத்தின் கட்டமைப்பை இறுதி செய்வதன் மூலம் வடிவமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.