சென்னை, ஜன.3–
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இதய நோய்கள் குறித்த கருத்தரங்கம் நிறுவனர் வேந்தர் ஐசரி கே.கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் மற்றும் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வேல்ஸ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவர் மனோஜ்ஷா, குளோபல் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜான்வி சுவராப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீமன் நாராயணன், இயக்குனர் கதிரேசன், துறைத்தலைவர் அஷோக் குமார், துணைப்பேராசிரியர் அபிராமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவர் மனோஜ் ஷா பேசுகையில்,
இதய நோய்கள் வராமல் தடுக்க உணவு பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. உணவில் காய்கறிகள், தானியங்கள் ஆகியவை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்களாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்யவேண்டும். அதேபோல் புகை மற்றும் மது ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். மன அழுத்தமும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உடலையும் மனதையும் நன்றாக வைத்துக் கொண்டால் இதய நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.