செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடி: பாஜக நிர்வாகிக்கு ஓராண்டு சிறை

மதுரை, ஜன.12–

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க மாவட்ட நிர்வாகி, அவரின் மனைவி, மாமனாருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவமதன். இவர் பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான ஆகாஷ், அவரின் தாயார் ஆகியோரை சந்தித்து பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதோடு சிவமதன், அவர் மனைவி அபிராமி, மாமனார் செல்வம் ஆகியோர் ஆகாஷ் தாயாரிடம் தொடர்ந்து பேசி வேலை வாங்கித் தருவதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளனர்.

3 பேருக்கும் சிறை

பிறகு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்ட ஆகாஷயும், அவர் தாயாரையும் சிவமதன் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி மகாராஜன், “பண மோசடியில் ஈடுபட்டும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவர்களை தாக்கிய குற்றத்திற்காகவும் பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன், அவர் மனைவி அபிராமி, மாமனார் செல்வம் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனையும், மூவரும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்” எனவும் தீர்ப்பளித்தார்.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *