சிறுகதை

வேலை – ரமேஷ்குமார்

அம்பத்தூரில் இருக்கும் நான், ஆவடியில் ஆட்டோமொபைல் கடை வைத்திருக்கும் என் நண்பன் மூர்த்தியை பார்க்க வந்திருந்தேன்.

கடை வாசலில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது மூன்று திருநங்கைகள் கை தட்டியபடி ஒவ்வொரு கடையாய் ஏறி காசு வாங்கிக் கொண்டிருந்தனர்.

மூர்த்தியை பார்த்ததும் அந்த மூன்று பேரும் அவனை பவ்வியமாக கையெடுத்து கும்பிட்டு விட்டு அவனிடம் காசு கேட்காமல் வேறு கடைகளுக்கு சென்றனர்.

எனக்கு இது ஆச்சரியமாய் இருந்தது.

“என்ன மூர்த்தி…அந்த மூணு பேரும் உன்னை பயபக்தியோட கும்பிட்டுவிட்டு

உன்கிட்ட காசு கேட்காம போறாங்க.ஏன்?” என்று கேட்டேன்.

” போன மாசம் நாலு பேர் காசு கேட்டு இந்த கடைக்கு வந்தப்ப

வாக்குவாதம் வந்தது.அதன் விளைவு தான் இது” என்றான்.

” வாக்குவாதமா…புரியும்படி சொல்லேன்”

” ‘ நான் காசு கொடுக்க மாட்டேன்.எல்லோரும் கிடைச்ச வேலைக்கு போக வேண்டியது தானே.ஏன் கை தட்டி தட்டி பிச்சை எடுக்கிறீங்க’னு போன மாசம் அவங்களை பார்த்து கோபமா கேட்டேன்.

பதிலுக்கு அவங்களுக்கு என்மேல ஆத்திரம் வந்திடுச்சு.

திருப்பி என்கிட்ட ‘ யாரு எங்களுக்கு வேலை போட்டுகொடுக்கிறா…நீ எங்கள்ல ஒருத்தருக்கு வேலை போட்டு கொடுப்பியா? னு சூடா கேட்டாங்க.

‘ வேலை வாங்கித்தர நான் ரெடி.ஒழுங்கா வேலைக்கு தொடர்ந்து வர

முடியுமா?னு நான் திருப்பிக்கேட்டேன்.

‘ நான் ரெடி.என்ன வேலை?’னு அதுல ஒருத்தர் கேட்டார்.

நான் அவங்க முகவரியை வாங்கி வச்சிட்டு உடனே என் கடையை பூட்டிட்டு வேலை கேட்டவரை என் டூவீலர்ல உட்கார வச்சு தினசரி மார்க்கெட்ல காய்கறி கடை வச்சிருக்கிற என் பிரண்டுகிட்ட கூட்டிட்டுப்போய் அறிமுகப்படுத்தி சேர்த்திவிட்டேன். அவன் உதவிக்கு ஆள் இல்லாமல் ரொம்பவும் சிரம்மப்பட்டுக்கிட்டிருந்தான்.

இப்ப அந்த திருநங்கை சந்தோஷமா வேலை பார்த்திட்டிருக்காங்க. அந்த நன்றிக்கடனுக்குத்தான் இந்த கும்பிடு. இந்த மூணு பேர்ல ஒருத்தர் எஞ்சினீயரிங் படிச்சிருக்காராம். உன் கடைல ஏதாவது ஒரு வேலை இருந்தா போட்டுக்கொடேன்.

அவங்களும் நம்மை மாதிரியான மனுஷங்க தானே!” என்றான் மூர்த்தி.

சிறிது நேரம் யோசித்த நான்,

எனது எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் என்னுடைய உதவியாளராய் சேர்த்துக்கொள்ள ‘ அந்த’ திருநங்கையை அழைப்பது என்று முடிவு செய்து அவர் முகவரியை மூர்த்தியிடம் கேட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *