சிறுகதை

வேலைக்குப் போகும் எந்திரங்கள் .. முகில் தினகரன்

எதிர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அந்த ஆபாச போஸ்டரை திறந்த வாய் மூடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.

அவன் மட்டுமல்ல, அந்த பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த அத்தனை ஆண் மகன்களும், அந்தப் போஸ்டர் அழகியை மனதிற்குள் உரித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு அலுவலகத்தில் வெள்ளைக் காலர் பணிக்குச் செல்லும் டீஸண்ட் ஆசாமிகள். டிப்டாப்பான டிரஸ்ஸுடன் அடிக்கடி வாட்சையும் பஸ் வரும் திசையையும் பார்த்த வண்ணம் பரபரப்பாயிருந்தனர்.

யாரோ கையைத் தொட்டு அழைப்பதை உணர்ந்த ஆறுமுகம் சடாரென்று வேகமாகத் திரும்பினான். அழுக்கு மூட்டையாய் ஒரு பிச்சைக்காரன். உடல் மீது தண்ணீர் பட்டு பல வருஷங்கள் ஆகியிருக்கும் போலிருந்தது. எண்ணை காணாத செம்பட்டைத் தலை. பிளேடு அறிமுகமாகாத முள் தாடி முகம்.

“சார்…ஏதாச்சும் தர்மம் பண்ணுங்க சார்” ஏற்கனவே கையிலிருந்த சில்லரைகளைக் குலுக்கியபடி கேட்டான்.

“இடியட்!…இதுதான் பிச்சை கேட்கிற லட்சணமா?…எத்தனை தைரியமிருந்தா தொட்டுக் கூப்பிடுவே?…சாக்கடைல கிடக்கற பன்னி மாதிரி இருந்துக்கிட்டு என்னையே தொட்டுப் பேசறியா?” கத்தினான் ஆறுமுகம்.

“தர்மம் பண்ணுங்க சாமி” அவன் பழைய பல்லவியையே பாட,

“ச்சை…எங்க போனாலும் இந்தப் பிச்சைக்காரனுக தொல்லை தாங்க முடியலை!…ஒரு சட்டம் போட்டு இவனுகளையெல்லாம் பிடிச்சிட்டுப் போய் ஜெயில்ல போடணும்” ஆறுமுகம் அங்கு நின்று கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து சொல்ல,

“நீங்க சொல்றதுதான் சார் சரி!…இவனுகளையெல்லாம் இப்படி சுதந்திரமா அலைய விட்டா இப்படித்தான் தராதரமில்லாம எல்லோரையும் தொட்டுப் பேசுவானுக…ஏமாந்தா தோள் மேலே குட கையைப் போடுவானுக!..” இன்னொரு நடுத்தர வயதுக்கார ஆபீஸர் ஆறுமுகத்துக்கு ஆதரவாய்ப் பேசினார். ஏதோவொரு அரசு அலுவலகத்தில் அவர் வேலை பார்க்கிறார் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. லஞ்சப் பணத்தின் ஒளி வீசியது.

தொடர்ந்து, அங்கு நின்று கொண்டிருந்த ஆபீஸ் ஆசாமிகள் அனைவருமே ஒட்டு மொத்தமாய் அந்த பிச்சைக்காரனைத் திட்டித் தீர்க்க, அவன் அமைதியாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அன்றிலிருந்தே அந்த நேரத்தில் அங்கு நிற்கும் ஆபீஸ்காரர்களிடம் பிச்சை கேட்பதை தவிர்த்தான்.

நான்கு நாட்களுக்குப் பிறகு,

காலைச் சூரியன் தன் தகிப்புப் பணியை சற்று முன்னதாகவே ஆரம்பித் திருந்ததால் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு என்னவோ போலிருந்தது. “என்னாச்சு?…எனக்கு என்னாச்சு?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

சில நிமிடங்களுக்கு மேல் அவனால் நிற்கவே முடியாது போக, “பேசாமல் லீவு போட்டுட்டு வீட்டுக்கே திரும்பிப் போயிடலாமா?” யோசித்தான்.

திடீரென்று உடலெங்கும் வியர்வை வெள்ளமாய்ப் பெருக, மண்டைக்குள் பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தான். கண்கள் இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்ததும் எப்படியும் இன்னும் சொற்ப வினாடிகளில் மயங்கி விழப் போகிறோம் என்பதை உணர்ந்து பக்கத்தில் நிற்பவரிடம், “எனக்கு…எனக்கு…மயக்கம் வர்ற மாதிரி இருக்கு” என்று ஈனக் குரலில் சொன்னான்.

அவன் குரல் அவனுக்கே கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலிருந்தது. உடனிருந்தவர் ஆறுமுகத்தை சட்டெனப் பற்றி, மெல்ல நகர்த்தி பஸ் ஸ்டாண்டின் சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்து, தானும் அருகில் அமர்ந்து ஆறுமுகத்தின் நெஞ்சுப் பகுதியை நீவி விட்டார்..

மற்றவர்களோ, இங்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கு எந்தவித சம்மந்தமுமில்லை என்கிற பாணியில் அப்படியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிறை மாத கர்ப்பிணியாய் வந்து நிற்க அனைவரும் வேகமாய் ஓடிப்போய் பஸ்ஸை, வெல்லக்கட்டியை மொய்க்கும் கட்டெறும்புகளைப் போல் மொய்த்தனர். ஆறுமுகத்தின் அருகில் அமர்ந்திருந்தவரும் அத்தோடு தன் கடமை முடிந்து விட்டது என்கிற ரீதியில் எழுந்தோடினார்.

பஸ் அங்கிருந்து நகர்ந்த மூன்றாம் நிமிடம் ஆறுமுகம் முழு மயக்கத்திற்குப் போய், அப்படியே மெல்ல மெல்லச் சரிந்து அதே பெஞ்சிலிருந்து நழுவி தரையில் குப்புற விழுந்தான்.

மதியம் மூன்று மணி வாக்கில் கண் விழித்த ஆறுமுகம், தான் பஸ் ஸ்டாண்டிற்கு பக்கத்தில் உள்ள பார்க்கின் சிமெண்ட் பெஞ்சில் படுக்க வைத்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சியானான். “எனக்கு என்னாச்சு?…நான் ஏன் இங்க படுத்துக் கிடக்கறேன்?” மனதிற்குள் கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, சுற்றும் முற்றும் பார்த்தான்.

நான்கு நாட்களுக்கு முன் தொட்டுப் பேசியதற்காய் அவனிடம் கேவலமாய்த் திட்டு வாங்கிய அந்தப் பிச்சைக்காரன் சற்றுத் தள்ளி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனை கோபமாய் முறைத்து விட்டு, தட்டுத் தடுமாறி எழுந்து ரோட்டிற்கு எதிர்ப்புறமிருந்த அந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.

“என்ன சார் மப்பு தெளிஞ்சிடுச்சா?” டீக்கடைக்காரன் கேட்க,

“நான்சென்ஸ்” என்று அவனைத் திட்டி விட்டு டீ சாப்பிடும் எண்ணத்தை தூக்கியெறிந்து விட்டு, மீண்டும் பஸ் ஸ்டாப்பிற்கே வந்து நின்றான் ஆறுமுகம்.

மறுநாள்.

வழக்கம் போல் பஸ் ஸ்டாப்பிங்கிற்கு பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு, வேகமாய்த் திரும்பிய ஆறுமுகம், தன் முதுகிற்கு பின்புறம் நின்றிருந்த அந்தப் பிச்சைக்காரனைக் கவனிக்காமல் மோதி விட, நடுநடுங்கிப் போனான் அந்தப் பிச்சைக்காரன்.

“ஏண்டா நாயே…உன்னைய இந்த ஏரியா பக்கமே வரக் கூடாது!ன்னு சொன்னேன் அல்ல?…அப்புறம் எதுக்குடா இங்கியே திரியறே?” அக்கினிப் பார்வையுடன் அனல் வார்த்தைகளைக் கொட்டினான்.

கூனிக் குறுகி, அமைதியாய் நகர்ந்தான் அந்தப் பிச்சைக்காரன்.

அப்போது, “சார்…சார்” என்று அந்தப் பெட்டிக்கடைக்காரன் அழைக்க, திரும்பிப் பார்த்தான் ஆறுமுகம்.

“கொஞ்சம் இங்க வாங்க சார்”

“என்னய்யா?…அதான் பத்து ரூபா நோட்டு குடுத்தேனே?” என்று ஆறுமுகம் சொல்ல,

“சார்…நாலஞ்சு நாளைக்கு முன்னாடி…நீங்களும் உங்க கூட நின்னுட்டிருந்த டிப்டாப் ஆபீஸ்காரனுகளும் அந்தப் பிச்சைக்காரனைத் திட்டியதையும் கவனிச்சேன்…ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க மயங்கி விழுந்த சம்பவத்தையும் நான் கவனிச்சேன்!…ஒண்ணை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கிட்டேன் சார்” என்றான் பெட்டிக்கடைக்காரன்.

“த….உனக்கு என்ன வேணும்?…எதுக்கு இப்ப அனாவசியமா தேவையில்லாததையெல்லாம் பேசறே?” அவன் மீதும் கடுப்பு காட்டினான் ஆறுமுகம்.

“இதான்…இதான் சார் உங்க ஆபீஸர்ப்புத்தி, அன்னிக்கு உங்க கூட சேர்ந்து உங்களுக்கு ஆதரவா அந்த பிச்சைக்காரனைத் திட்டித் தீர்த்தாங்களே?…அந்த கூட்டம் நீங்க மயங்கி கிடந்தப்ப என்ன சார் பண்ணினாங்க?…கண்டுக்கிட்டாங்களா?…பஸ் வந்ததும் அவனவன் உங்களை அப்படியே விட்டுட்டுப் போயிட்டானுக!”

ஆறுமுகம் கண்களைச் சுருக்கிக் கொண்டு அந்த பெட்டிக்கடைக்காரனைப் பார்த்தான்.

“அதுக்கப்புறம் உங்களை மாதிரிப் பேண்ட் சட்டை போட்ட ஆளுங்க நிறைய பேர் பஸ் ஸ்டாப்புல வந்து நின்னாங்க…குப்புறக் கிடக்கற உங்களைப் பார்த்தாங்க!…ஒரு பயல் கூட உங்களுக்கு உதவி செய்யலை!…அவனவனுக்கு அவனவன் வேலை!…நாயெல்லாம் உங்க பக்கத்துல வந்து…உங்களை முகர்ந்து பார்த்திட்டுப் போச்சுக!…கடைசில….”

“கடைசில?….”

“ஒருத்தர் வந்தாரு…உங்களை அப்படியே அலாக்கா துக்கிட்டுப் போய் அந்த பார்க் பெஞ்ச்ல படுக்க வெச்சு…முகத்துல தண்ணியடிச்சாரு…அப்புறம் வாய்ல கொஞ்சம் புகட்டி விட்டுட்டு… உங்க பக்கத்திலேயெ உட்கார்ந்து துண்டாலே விசிறிக்கிட்டிருந்தாரு”

“யாரு?…யாரு அவரு?”

“உங்களைத் தொட்டதுக்காக உங்க கிட்ட திட்டு வாங்கினானே?..அதே பிச்சைக்காரன்தான்”.

ஷாக்கானான் ஆறுமுகம்.

“சார்…அவன் பிச்சைக்காரன்தான்…ஆனா மனுஷனை மனுஷனா மதிக்கத் தெரிஞ்சவன் சார் அவன்!…உங்களை மாதிரி…ஏழை…பணக்காரன்…ஆபீஸர்…பிச்சைக்காரன்…அப்படிங்கற வித்தியாசமெல்லாம் அவனுக்குத் தெரியாது சார்!…அன்னிக்கு உங்களுக்கு ஆதரவா பேசினவங்கெல்லாம் பார்வைக்குத்தான் மனுஷங்க…ஆனா உண்மையில் ஆபீஸுக்குப் போற எந்திரங்கள்”

“அவன்…இப்ப…எங்கே இருப்பான்?” திக்கித் திணறிக் கேட்டான் ஆறுமுகம்.

“நாலு தெரு பிச்சையெடுக்கறவன்…எங்கே இருப்பான்?னு எப்படி சார் சொல்ல முடியும்!…ஆனா ஒண்ணு…ராத்திரி தூங்கறதுக்கு…அதோ அந்த பிளாட்பாரத்துக்குத்தான் வருவான்!…காலைல வாங்க பார்க்கலாம்!” சொல்லி விட்டு பெட்டிக்கடைக்காரன் வியாபாரத்தைக் கவனிக்கப் போனான்.

மறுநாள் அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்து ஏதாவது உதவி செய்ய வேண்டும், என்று எண்ணியபடி பேருந்தில் ஏறினான் ஆறுமுகம்.

காலை.

“என்ன பெட்டிக்கடைக்காரரே…அந்தப் பிச்சைக்காரர் ராத்திரி தூங்க வரலையா?” ஆறுமுகம் திரும்பி அந்த பிளாட்பாரத்தைப் பார்த்தபடி கேட்க,

“வந்தான் சார்…நான் கடையைப் பூட்டிட்டுப் போகும் போத்கு கூட பார்த்தேன் அங்கதான் முக்காடு போட்டுக்கிட்டு தூங்கிட்டிருந்தான்!…காலைல ஆளைக் காணோம்!…ஒருவேளை நேரத்திலேயே எந்திரிச்சு பிச்சைக்குப் போயிட்டானோ என்னவோ?”

நேற்றிரவு, தாறுமாறாக பிளாட்பாரத்தில் புகுந்த ஒரு கண்டெய்னர் லாரியில் சக்கரத்தில் சிக்கி அந்தப் பிச்சைக்காரன் அரைபட்டுப் போனதும் பொழுது விடிவதற்குள் அந்த அனாதைப் பிணம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப் பட்டதும் ஆறுமுகத்திற்கும் தெரியாது. அந்தப் பெட்டிக்கடைக்காரனுக்கும் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *