சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்
சென்னை, செப்.8-
வேலைக்காக சென்று குவைத்தில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேர் குவைத்தில் பணிபுரிய கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள டிராவல்ஸ் மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை கொடுத்து 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சென்றனர்.
அங்கு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் 2-ம் ஆண்டுக்கான விசாவை புதுப்பிக்க ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கேட்டதை தராததால் கொடுமைப்படுத்துவதாகவும், சொந்த ஊர் திரும்ப பாஸ்போர்ட்டை தர ரூ.55 ஆயிரம் கேட்பதாகவும் இந்திய தூதரகத்தில் புகார் செய்தனர். இதனால் வேலையை விட்டு நிறுத்தியதுடன், சம்பளமும் தராததால் தாங்கள் அவதிப்படுவதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குவைத்தில் சிக்கி தவிக்கும் 19 பேரையும் மீட்டு தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு 19 பேரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குவைத்தில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை இந்திய தூதரகங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்தது.
அதன்படி குவைத்தில் இருந்து மீட்கப்பட்ட 19 பேரும் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் 19 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் ஏற்பாட்டில் வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.