செய்திகள்

வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலக தின விழா

வேலூர், மே 23

வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மாவட்ட மைய நூலகத்தில் இராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள் பொது நூலக தின விழாவாக 4வது ஆண்டாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் கு.இரா.பழனி வரவேற்று பேசினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மேலாளர் ஓய்வு பா.இராசேந்திரன், காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் த.வ.சிவசுப்பிரமணியம், செயலாளர்செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முத்து சிலுப்பன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் வங்காள மாநிலம் ராதாநகர் கிராமத்தில் பிறந்தார். அவரது பிறந்த தினம் பொது நூலக தினமாக கொண்டாடப்படுகிறது. ராஜாராம் மோகன்ராய் முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

ராஜா என்ற பட்டத்தை அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார். இந்திய நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடியவர் என்று கூறினார்.

வேலூர் ஜெயின் கோசலை, பி.எம்.டி.ஜெயின் பள்ளி, மருதர் கேசரி ஜெயின் கல்லூரியின் நிர்வாகி ருக்ஜி கே.ராஜேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நல்நூலகர் ஜெ.ரவி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *