வேலூர், ஜன.22–
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி காட்பாடி வட்டம், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்லைக்கழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 21.1.2025 முதல் 24.1.2025 வரை 4 நாட்கள் மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அறிவியல் வினாடி வினா போட்டியும், 23–ந் தேதி அன்று அறிவியல் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது.
மாணவ, மாணவிகள் இந்த 4 நாட்களும் பங்கேற்று அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தலாம், மேலும் இது சம்பந்தமாக பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகி அறிவியல் கண்காட்சி சிற்றேடை அணுகலாம். சிறந்த முதல் மூன்று பரிசுகளை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. மேலும் நான்கு நாட்களும் அறிவியல் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. மேலும் இக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக கண்டுகளிக்க நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம், பதிவாளர் செந்தில் வேல்முருகன், துறைத்தலைவர்கள் கே.தினகரன் (வேதியியல்), எஸ்.யுவராஜன் (இயற்பியல்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.