செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து? உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி, ஏப். 16–

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக , ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த சூழலில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *