செய்திகள்

வேலூர் சிறையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு: விடுப்புக்கு நளினி கோரிக்கை

வேலூர், ஜூலை 22–

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினியும் முருகனும் நீண்ட நாள் விடுப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், ஆண்கள் சிறையில் உள்ள சமையல் கூடம், கைதிகள் அறை, கைதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சிறை நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினியைச் சந்தித்து பேசி, அவரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

நளினி கோரிக்கை

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஆண்கள் மத்திய சிறையில் 742 பேரும், பெண்கள் சிறையில் 97 பேரும் உள்ளனர். சிறையில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன்.

முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எங்களால் 30 நாள்களுக்கு மட்டும்தான் விடுப்பு வழங்க முடியும். அதைத் தாண்டி கூடுதலாக மேலும் 30 நாள்கள் வழங்க முடியும். ஆனால், நீண்ட விடுப்புக்கு நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றால், திமுக அரசு, அதை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.

வேலூர் சிறையில் ஷூ, பெல்ட், மருத்துமனைக்குத் தேவையான பேன்டேஜ் போன்றவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, மாதம் ரூ.6,000 வரை கைதிகள் சம்பாதிக்கின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். ஏற்கனவே வேலூர் சிறைக் கைதிகளால் ஒரு பெட்ரோல் பங்க்கும் நடத்தப்பட்டு வருகிறது.

கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்ப நாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிளை சிறைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *