வேலூர், ஏப்.16-
வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-
பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மருந்து கட்டுப்பாட்டுத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், உள்ளாட்சி துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் ‘Drug Free TN’ என்ற செயலியை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.
பள்ளி, கல்லூரி வளாகங்களை போதைப்பொருட்கள் இல்லா வளாகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சுவரொட்டி தயாரித்தல், வினா-விடை, சுலோகன் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான குழு ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவில் 5 பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘போதைப்பொருட்கள் எனக்கு வேண்டாம்’ என்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்துதல் வேண்டும்.
கபடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் மூலமாகவும் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் போதைப்பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விவரங்களுடன்கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், கல்லூரி கல்வி இணை இயக்குனர் மலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்ஜித், முதன்மை கல்வி அலுவலர் தயாளன், நகராட்சி கமிஷனர்கள் மங்கையர்கரசன், வேலவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.