செய்திகள்

வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான அறிகுறி:

Makkal Kural Official

இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு

லண்டன், ஏப்.20–

கே2–18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விஞ்ஞானி டாக்டர் மதுசூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றார். முதுநிலை பட்டம் மற்றும் பி.எச்.டி ஆய்வுகளை மாசசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) முடித்தார். சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களில் இவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2013ம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.

55 கான்கிரி–இ என்ற தொலைதூர கிரகம் பூமியைவிட பெரியது. அதில் கார்பன் அதிகளவில் இருக்கலாம் என இவரது ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. வாஸ்ப்–19பி என்ற கிரகத்தில் டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளதையும் இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது. கடந்த 2020–ம் ஆண்டு கே2–18பி என்ற கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் என கூறினர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இவர் தனது குழுவினருடன் கே2–18பி கிரகத்தை ஆய்வு செய்ததில், அதில் டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டை சல்பைடு வாயுக்கள் இருப்பதை கண்டறிந்தனர். இவை கடலில் இருக்கும் பாசிகள் வெளியிடும் வாயுக்கள். இதன் மூலம் இந்த கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக டாக்டர் மதுசூதன் தலைமையிலான குழுவினர் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *