செய்திகள்

வேப்பூர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: ஒன்றரை வயது குழந்தை உள்பட 4 பேர் பலி

வேப்பூர், ஜூலை 29–

வேப்பூர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மதுமிதா, ஒன்றரை வயது குழந்தை ஜெனிலியா மற்றும் மாமியார் தமிழ்ச்செல்வி உடன் இன்று காலை சென்னையில் இருந்து தேனிக்கு காரில் சென்றார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, குழந்தை ஜெனிலியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மாமியார் தமிழ்ச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் வேப்பூர் போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துர்த்தஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வியும் உயிரிழந்தார். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *