சிறுகதை

வேண்டும் வளர்ச்சி! – இரா.இரவிக்குமார்

தம் சீடர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் அவர்கள் கேட்கும் கேள்விகள் , சந்தேகங்களைுக்குப் பதிலளித்து மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுத்திப் பெரும் புகழ்பெற்றிருந்தார் குரு பரந்தாமர்.

நன்னெறி நூல்கள் வான சாஸ்திரம், ஜோதிடம் போன்றவற்றை கற்றுணர்ந்து கரைகண்ட குரு பரந்தாமர் செல்லுமிடமெல்லாம் மக்கள் பெரும் திரளாக வந்து அவரிடம் தங்கள் துயரங்கள் நீங்க மேற்கொள்ள வேண்டிய நன்னெறிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு நேரவிருக்கும் எதிர்மறை வினைகளுக்கான பரிகாரங்கள் போன்றவற்றை நேரில் கேட்டறிவார்கள்.

பரந்தாமர் தம் சீடர்களை அன்புடனும் அதே நேரத்தில் அவ்வப்போது அவர்களுக்கு தோன்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தித் தான் கற்றுணர்ந்த கலைகளைப் போதித்து திறமையானவர்களாக உருவாக்கி வந்தார். ஆனால் தம் சீடர்களைத் தாம் மக்களுக்கு உபதேசிப்பது, ஜோதிடம் பார்த்தல், பரிகாரங்கள் கூறுவது போன்றவற்றைச் செய்ய இதுவரை அனுமதித்தது இல்லை.

அன்று அந்த ஊரில் பரந்தாமர் மவுன விரதம் மேற்கொண்டிருந்ததால் தம் தலைமைச் சீடரிடம் மக்களைச் சந்திக்கும்படி கூறித் தம் பணியை முதல் முறையாகச் செய்யச் சொன்னார்.

வெகு நாட்களாக அந்தத் தலைமைச் சீடர் குரு தனக்கு அதுபோல் சந்தர்ப்பம் அளிக்காமல் தாமதப்படுத்துவதாக ஓர் எண்ணம் கொண்டிருந்தார்.

குரு தமக்களித்த அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம் தமது முழுத் திறமையையும் காட்டி மீண்டும் மீண்டும் குரு தமக்கு அம்மாதிரி சந்தர்ப்பத்தை வழங்கும்படி செய்ய வேண்டும் என்று தலைமைச் சீடர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அதிகாலையில் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண் தன் இடுப்பிலிருந்த இரண்டரை வயதுக் குழந்தையுடன் தலைமைச் சீடரைச் சந்தித்த வேளையில் சில கேள்விகள் கேட்டாள்.

“குருக்களே, வியாபரத்திற்காக வெளிநாடு சென்றிருக்கும் என் கணவர் எப்போது வருவார்?”

“வெகு விரைவில்!” என்று பதில் தந்தார் தலைமைச் சீடர்.

“மீண்டும் அவர் என்னைப் பிரியும் சூழ்நிலை உண்டாகுமா?”

“இல்லை! அவர் இங்கே வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து உன்னுடனே இருப்பார்!”

அப்போது அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் சட்டென்று வெளியே சென்றாள்.

இதனால் கோபமடைந்த தலைமைச் சீடர் சற்று நேரம் கழித்துத் திரும்பவும் தம்மைப் பார்க்க வந்த அவளைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த குரு தமது மவுன விரதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

மறுநாள் தம் தலைமைச் சீடரிடம் குரு இது பற்றிப் பேசினார்.

“அந்தப் பெண் எதற்காகப் பாதியில் எழுந்து சென்றாள் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“குருவே, அவள் நான் சொன்னதை நம்பவில்லை!”

“அப்படியென்றால் ஏன் திரும்ப வந்தாள்?”

“அதுதான் எனக்குச் சரியாகப் புரியவில்லை! ஒருவேளை தான் செய்தது தவறு என்று அவள் உணர்ந்து திரும்ப வந்திருக்கலாம்!”

“அப்படி நீ நினைத்திருந்தால் ஏன் அவளைத் திருப்பி அனுப்பிவிட்டாய்?”

“அவளுக்குப் பாடம் புகட்ட நினைத்தேன்!”

தலைமைச் சீடரின் பதிலால் குரு சிரிக்கவே…

“குருவே நான் செய்தது தவறா?”

“முற்றிலும் தவறு! அதிகாலையில் அந்தப் பெண் வந்ததால் அவள் தன் குழந்தைக்கு எவ்வித காலைக்கடனையும் செய்யாமல் அழைத்து வந்திருந்தாள். தன் இடுப்பில் தூக்கி வந்த குழந்தை செய்த அங்க அசைவுகளை வைத்து அதற்குக் காலைக் கடன்களைச் செய்ய அவள் வெளியே எடுத்துச் சென்றாள். முக்காலங்களையும் வான சாஸ்திரம், ஜோதிடம் படித்து உணர்ந்து மற்றவர்களுக்குக் கூறும் நீ, உன் எதிரே நின்ற பெண்ணின் மனநிலையையும் அந்தக் குழந்தையின் உடல் அசைவுகளையும் கண்டு உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை! உனக்குப் பொறுமையும் தீர்க்கமும் உன் மீதே உனக்கு நம்பிக்கையும் இன்னும் அதிகம் வேண்டும்!”

குரு ஏன் தமக்கு இதுநாள்வரை முக்கியமான வேலைகளைத் தராமல் குறிப்பாக மக்களுடனான சந்திப்பதைத் தரவில்லை என்பதைப் புரிந்து கொண்டார் தலைமைச் சீடர்.

தமக்குப் பிறரைப் பற்றிய புரிதலில் மேலும் வளர்ச்சி வேண்டும் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *