சிறுகதை

வேண்டாம் விபரீத சாகசம் | துரை. சக்திவேல்

மாலை 4 மணி பள்ளிக்கூடங்கள் விட்டதும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு செல்ல தொடங்கினர்.

நீண்ட தூரங்களில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக் கூடம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

பஸ் படிகட்டுகளில் ஆட்கள் தொடங்கியபடி கூட்டமாக வந்த மாநகர பஸ்கள் சில அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாகமாக சென்றன.

அதை பார்த்த சில மாணவர்கள் வேகமாக ஓடி போய் அந்த பஸ்களின் படிகட்டுகளில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.

கூட்டம் குறைவாக அடுத்தடுத்து வந்த சில பஸ்களில் மாணவர்கள் ஏறினர்.

அந்த பஸ் நிறுத்தத்தில் 11ம் வகுப்பு படிக்கும் பாலு, அவனது நண்பர்கள் கோபி, செல்வம், மோகன் மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

கூட்டம் இல்லாமல் வந்த பஸ்களில் ஏறாமல் பாலு மற்றும் அவனது நண்பர்கள் நின்றனர்.

அப்போது கூட்டமாக ஒரு பஸ் வந்தது.

அதை பார்த்த நண்பர்களில் ஒருவன் டே மச்சான் இதுல போகலாம்டா…. என்றான்…

ஓகே…. ஓகே… என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

அந்த பஸ்சில் பயணிகள் எல்லோரும் ஏறினர்.

பஸ் மெதுவாக கிளம்பியது.

அதுவரை பாலுவின் நண்பர்கள் பஸ்சில் ஏறாமல் நின்று கொண்டிருந்தனர்.

பஸ் கிளம்பி சிறிது தூரம் நகர்ந்த பின்னர் பாலு மற்றும் அவனது நண்பர்கள் பஸ் பின்னால் ஓடிக் கொண்டே ஒவ்வொருவராக படிகட்டில் ஏறினார்.

ஒரு சில மாணவர்கள் பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்து ஏறி அதில் தொங்கியபடி சென்றனர்.

பஸ் கொஞ்சம் வேகமாக செல்ல தொடங்கியது.

பாலு பஸ்சில் ஏறாமல் பஸ்சின் வேகத்திற்கு அவனும் ஓடினான்.

சிறிது தூரம் சென்ற பின் பஸ்சின் ஜன்னல் கம்பியை பிடித்து ஏறி தொங்கிய பாலு, ஜன்னலில் கால் வைத்து, பஸ்சின் கூரை மீது ஏறினான்.

பஸ் வேகமாக செல்லத் தொடங்கியது, பாலு மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவரும் பஸ்சில் தொங்கியபடி சாகசம் செய்து கொண்டே சென்றனர்.

அவற்றை பார்த்து பஸ்சின் உள்ளே சீட்டில் அமர்ந்து கொண்டு பயணம் செய்த சக பயணிகள் கத்த தொடங்கினர்.

பஸ் டிரைவர் அவற்றை கண்டு கொள்ளாமல் பஸ்சை வேகமாக ஓட்டினார்.

அப்போது ஒரு பயணி, டிரைவர் வண்டியை நிறுத்தங்க. இந்த பசங்க கீழே விழப்போறாங்க என்று கத்தினார்.

டிவைரருக்கு கோபம் வந்தது…

சார் இந்த பசங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க…. இப்படி தான் தினமும் வருகிறார்கள், அமைதியா வாங்க என்று கத்தினார்.

அடுத்த பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ் நின்றது.

பாலு மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கி சாலை ஓரத்தில் நின்றனர்.

மற்ற பயணிகள் இறங்கினர். ஒரு சிலர் ஏறினர்.

பஸ் மீண்டும் கிளம்பியது.

பாலுவும் அவனது நண்பர்களும் அமதியாக நின்றனர்.

பஸ் சிறிது நகர்ந்து ஓடத் தொடங்கியதும் நண்பர்கள் வேகமாக ஓடி சென்று மறுபடியும் பஸ் படிக்கட்டிலும் ஜன்னல் கம்பிகளிலும் தொங்கியபடி செல்லத் தொடங்கினர்.

இப்படியே 4 பஸ் நிறுத்தங்கள் கடந்தன. பாலுவின் நண்பர்களும் தொங்கிக் கொண்டு சென்றனர். பாலு மட்டும் ஜன்னல் கம்பியை பிடித்து பஸ் கூரையின் கம்பியை பிடித்துபடி கூரையில் உள்ள கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டே சென்றான்.

அப்போது அந்த பஸ்சின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அதில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்தவர்கள் நிலை தடுமாறினர்.

இந்த அதிர்ச்சியில் பஸ்சின் கூரையின் கம்பியை படித்துச் சென்ற பாலு மேலிருந்து கீழே குதித்து விட்டான். அதில் அவனது கால் முறிவு ஏற்பட்டது.

கால் வழி தாங்காமல் பாலு அழத் தொடங்கினான். ‘‘ஓ வென்று’’ கத்தினான்.

அவனது அலறல் சத்தத்தை கேட்டு அங்கி நின்று கொண்டிருந்தவர்கள் பரிதாபப்பட்டனர்.

ஒரு சில பயணிகள், நாங்கள் எவ்வளவோ சொன்னோம்… தலை, கால் தெரியாமா ஆடிக்கிட்டே வந்தீங்களேடா…

பெரியவங்க சொல்றத எங்கடா கேட்கிறீங்க…

இப்ப பாரு…. அய்யோ…. அம்மான்னு கத்துறீங்க…. என்று ஒவ்வொரு வரும் தங்கள் பங்குக்கு கத்தினர்.

பாலு வலி தாங்காமல் கத்துவதை பார்த்து உடனடியாக அவனது நண்பர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விபரம் அவனது நண்பர்கள் மூலம் அவனது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.

டே…. நான் அண்ணேக்கே உன்னிடம் சொன்னே…. நீ கேட்கமா…. வீணா போன பசங்களோடு சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட்டு இப்படி கால் உடைஞ்சு கிடக்கிற….

இப்பா அவைங்களா வந்து உன்னை பாக்கிறது….. உனக்கு செலவு செய்றது…

வேற ஏதாவது பெரிசா நடந்து இருந்தா…. என்ன ஆயிருக்கும்….

கொஞ்சமாவது பெரியவங்க சொல்றதை கேளுங்கடா.. என்று கால் உடைந்து மருத்துவமனையில் படுத்துக் கிடந்த தனது மகனை திட்டிக் கொண்டு இருந்தாள் பரிமளம்.

மருத்துவமனையின் கட்டிலில் படுத்துக் கொண்டு தனது தாய் திட்டியதை கேட்டும் கேட்காதபடி கண்களை மூடிக் கொண்டு கிடந்தான் பாலு.

அவனது அருகில் நின்று கொண்டிருந்த தந்தை கனகவேல் தனது பங்குக்கும் விட்டு வைக்கவில்லை. அவரும் பல்வேறு வசனங்களை பேசி காதில் கேட்க முடியாத சில பல வார்த்தைகளால் தனது மகனை திட்டியது மட்டுமல்லாமல் தனது மனைவி பரிமளத்தையும் திட்ட தொடங்கினார்.

அடியே… அப்பவே நான் சொன்னேன். இவ்வளவு தூரம் தள்ளி போய் பையனை படிக்க வைக்க வேண்டாம். நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் பள்ளியிலே படிக்க வைக்கலாம்னு சொன்னேன்.

நீ தான் கேட்கவே இல்லை. அவன் பேச்சை கேட்டுக்கிட்டு அவன் இஷ்டத்துக்கு எங்கேயோ இருக்கிற பள்ளி கூடத்தில் கொண்டு போய் சேர்த்தாய்.

அவன் என்னடானா…. சேராத பசங்களோடு சேர்ந்துகிட்டு பஸ்சில் போகும் போதும் வரும் போதும் குரங்கு சேட்டை செய்துகிட்டு இப்படி வந்து ஆஸ்பத்திரியில் படுத்துகிடங்கான். இதுக்கு எல்லாம் நீ தான் காரணம் என்று தனது மனைவியை திட்டினார் கனகவேல்.

அவர்களின் சத்தம் வெளியே நின்று கொண்டிருந்த நர்சுக்கு கேட்க அவர் வேகம் வேகமாக பாலு படுத்துகிடந்த அறைக்குள் வந்து, அங்கு நின்று கொண்டிருந்த அவனது தாய், தந்தையை சத்தம் போடாமல் அமைதியாக இருக்க சொன்னார்.

இதைத் தொடர்ந்து கனகவேல் அங்கிருந்து வெளியே சென்றார்.

பாலு அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு போலீஸ்காரர் ஒருவர் வந்தார்.

ஏன்டா… உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராதா.

படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்தவர்களை அடித்தால், போலீசார் மாணவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று பெற்றோர்களிடம் புகார் செய்கிறீர்கள்.

பெற்றோர்கள் வீதிக்கு வந்து போலீசாருக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்புகிறாங்க.

இப்படி எவனாவது பஸ்சிலிருந்து கீழே விழுந்து விபரீதம் ஏற்பட்டால், போலீசார் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்று பொது மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

நாங்கள் என்ன தாண்டா செய்வது….. என்று அந்த போலீஸ்காரர் புலம்பியபடி, பாலு பற்றிய விபரங்களை கேட்டு எழுதிக் கொண்டு வழக்குப்பதிவு செய்துவிட்டு சென்றார்.

சிறிது நேரத்திற்கு பின் பாலுவுடன் படிக்கும் நண்பர்கள் மருத்துவமனைக்கு அவனை பார்க்க வந்தனர்.

அவர்களை பார்த்த பாலுவின் தந்தை கனகவேல், ‘‘வாங்கப்பா…. வாங்க….. எல்லாரும் சேர்ந்துகிட்டு அவனை இந்த மாதிரி படுக்க வைச்சிட்டேங்களா’’ என்று கத்தினார்.

இல்ல அங்கிள் அது வந்து…. அது வந்து… என்று கூறிக் கொண்டே அந்த மாணவர்கள் பாலுவின் அறைக்குள் சென்றனர்.

அங்கு பாலு காலில் பெரிய கட்டுப் போட்டு படுத்துக் கொண்டிருப்பதை பார்த்த நண்பர்கள், டே மச்சான் சாரி டா…. என்று ஆறுதல் கூறினர்.

டே அதை விடுங்கடா…. என்று அவர்களை சமாதானப்படுத்தினான் பாலு.

என்னட எல்லோரும் சேகமா இருக்கேங்க என்று கேட்டான் பாலு.

அது ஒண்ணும் இல்லடா மச்சான்…. இந்த விஷயம் நம்ம பள்ளிக்கூடத்திற்கு தெரிஞ்சு, நம்ம பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோரை கூட்டிட்டு வர சொல்லி இருக்கிறார்.

நம்ம எல்லாத்துக்கும் டி.சி. கொடுத்து பள்ளிக்கூடத்திலிருந்து நீக்க போறாங்களாம் என்று கூறினர்.

அவர்கள் கூறியதை கேட்டதும் பாலுவிற்கு தனது தவறு தெரிய வந்தது.

இதை கேட்ட பாலுவின் தாய், டேய் பள்ளிக்கூடம் போகும் போது ஆடாம போங்கடான்னு சொன்னா…. எவன் கேட்டேங்க…. இப்ப உங்க படிப்பு தான் வீணா போகுது என்று புலம்பினார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் பாலுவின் நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

ஏன்டா உன்னை பெத்து வளர்த்ததுக்கு எங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்க என்று திட்டிக் கொண்டே வெளியே சென்றார் பாலுவின் தாய்.

6 மாதம் அவன் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

சிறிது நாளுக்கு பின் பாலு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

பள்ளி நிர்வாகம் பாலு உள்ளிட்ட நண்பர்களை அந்த பள்ளியிலிருந்து நீக்கி அதற்கான டி.சி.யை அவர்களது பெற்றோர்களிடம் கொடுத்தனர்.

அவர்களும் வேறு வழி தெரியாமல் வேறு பள்ளியில் சேர்ந்தனர்.

பாலுவின் நிலை அறிந்த அவனது நண்பர்களும் ஒழுங்காக பள்ளிக்கு சென்றனர்.

6 மாதத்திற்கு பின் காலை நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்த பாலு அடுத்த கல்வி ஆண்டில் மற்றொரு பள்ளியில் மீண்டும் 11ம் வகுப்பு சேர்ந்து ஒழுங்காக படிக்க தொடங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *