சிறுகதை

வேண்டாம் கோபம் | ராஜா செல்லமுத்து

காமராசு கோபத்தின் உச்சம் கொஞ்சம் கூடக் குறையவில்லை.

அவனை சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குள் நித்யாவிற்குப்போதும் போதுவென போய்விட்டது.

அவன் ,

‘‘உஸ்.. உஸ்.. ’’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்

‘‘கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களா…?

‘‘ஏன்…? கொஞ்சம் மூச்சு இளைத்துக் கொண்டே’’ கேட்டான் காமராசு.

‘‘இல்ல கொஞ்சம் கோபமா இருக்கீங்களே அதான்’’

‘‘ம்..ம்.. ’’ என்று தலையை மட்டுமே ஆட்டினான்.

‘‘வேண்டாங்க. ஏன் இப்பிடி கோபப்படுறீங்க..? நீங்க கோபப்பட்டு எதுவும் நடக்கப்போறதில்லை. உங்க உடம்பு தான் கெட்டுப்போகும். விட்டுருங்களேன் ’’ என்று நித்யா கொஞ்சும் தொனியில் சொல்லியும் கூட செவிசாய்க்கவில்லை.

‘‘ம்..ம்.. இப்ப உனக்கு நான் கோபப்படுறது தப்பு. அப்பிடித்தான சொல்ற.

ஆமா என்பது போல் தலையாட்டினாள் நித்யா.

‘‘ஒன்னோட கவல எனனையப் பத்தி ; என்னோட கவல இங்க நடக்கிற அக்கிரமங்கள பத்தி . உன்னைய மாதிரி இங்கு நடக்கிறத பாத்திட்டு கண்ணமூடி வாயப்பொத்தி பாத்திட்டு இருக்க முடியாது. தப்பு நடந்துச்சுன்னா தட்டிக் கேட்பேன்; கோபப்படுவேன்.

சண்டை போடுவேன்; இதுனால என்ன வந்தாலும் பரவாயில்ல’’ என்று கொஞ்சம் தைரியமாகவே சொன்னான் காமராசு.

‘‘நீங்க கோபப்பட்டு இங்க என்ன மாறப் போகுமுன்னு நினைக்கீறீங்க. எதுவும் கொஞ்ங் கூட மாறப்போறதில்ல வெட்டியா உங்களோட உடம்பு தான் கெடும்’’

‘‘ம்.. தப்பு செய்றத தட்டிக் கேட்டா உடம்பு கெடுமா ? அப்பிடின்னா இங்க நடக்கிறத பாத்திட்டு எதுவும் கேக்கக் கூடாதா..?

‘‘ஆமா. அப்பிடி இங்க என்ன நடக்குது பெருசா நீங்க திருத்தப் போறீங்க ?

‘‘ம்.. அப்பிடிக் கேளு . பிளாட்பார்ம்ல மனுசங்கள நடக்கவிடாம அவ்வளவையும் அடச்சிட்டு கடை வச்சிட்டு இருக்கிற ஆளுகள பாத்து நீ என்ன செய்யவ ’’

‘‘நான் என்ன செய்வேன் எதுவும் பேசமாட்டேன்; பேசாமத் தான் போவேன்’’

‘‘ம்.. பஸ்ல ஒரு பெண்ண ஒரு மிருகம் வீம்புக்கே உரசிட்டு வம்பிழுத்துட்டுப் போனா என்ன செய்வ?

‘‘ம்ஹூகும் நான் எதுவுமே செய்யமாட்டேன்; பேசாமத்தான் இருப்பேன்’’

‘‘இது மாதிரி என்னால எல்லாம் பாத்திட்டு இருக்க முடியாது. இழுத்து வச்சு நாலு அப்பு அப்புவேன்’’

‘‘பார்க் பீச்சுன்னு அளவுக்கு மீறி தப்பு பண்ணிட்டு காதல்ங்கிற பேரல லூட்டி அடிக்கிற ஆளுகளப்பாத்து என்ன பண்ணுவ?

‘‘என்ன பண்ணுவன்னு கேட்டா நான் என்ன சொல்றது.. பேசாம தான் இருப்பேன்’’

‘‘உன்ன மாதிரி அப்பிடியெல்லாம் இருக்க முடியாது. எச்சியக் காரி மூஞ்சியில துப்புவேன். உண்மையான காதல் இப்பிடி இருக்காதுன்னு அவங்களுக்கு ஒறைக்கிற மாதிரி சொல்லுவேன்’’

ம்… இதான் உங்களோட பிரச்சினையா.. ?

‘‘இதுமட்டுமில்ல. உச்சியில இருந்து கீழ்மட்டம் வரைக்கும் எல்லாம் பிராடு பித்தலாட்டம் கேப்மாரித்தனம் கோமாளிப் பார்வை’’

மனுசங்கள மதிக்காத ஆளுக ; திறமையானவங்கள பாராட்டாத பன்னாடைகள் தவறுன்னு தெரிஞ்சும் அத என்ன ஏதுன்னு கேக்காத ஆளுக. அதெல்லாம் பாக்கும் போது கொதிக்குது ; கோபம் வருது; உன்னைய மாதிரி இருக்கிற ஆளுகளெல்லாம் மனச உருவத்தில இருக்கிற ஜடம் ’’ என்று காமராசு நிறையவே கோபமாகப் பேசினான்

ஓ .கே.. ஓ.கே.. நீங்க தான் சமூக அக்கறை உள்ள ஆளு. நாங்கெல்லாம் சும்மா தான் ; இப்பிடி நீங்க கோபப்படும் போது இங்க ஏதாவது மாறியிருக்கா? இல்ல உங்க கோபத்துக்கு ஏதாவது விடை கெடச்சிருக்கா…? வெட்டியா நீங்க கோபப்பட்டு உங்க உடம்பு கெட்டுப்போனது தான் மிச்சம் இனிமே கோபப்படாதீங்க …

‘‘இல்ல நித்யா. இங்க நடத்திற தவறுகளைப் பாத்து நீ வேணும்னா பேசாம இருக்கலாம்; என்னால எல்லாம் பேசாம இருக்க முடியாது ;இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் தீர்வு வந்தே தீரும்; அதுவரைக்கும் என்னோட நெருப்ப அணைக்கவே மாட்டேன் ’’ என்று கோபம் கொப்பளிக்கப் பதில் சொன்னான் காமராசு

‘‘சரி தினந்தோறும் ஒரு கோபம் ; இன்னைக்கு என்ன நடந்துச்சு? ஏன் இப்படி ஒரு கோபம்’’

‘‘ம் .. இப்பவாவது கேட்டியே லைப்ரேரிங்கிறது என்ன …?

‘‘படிக்கிறது…

‘‘நீ.. சொன்னது தான பதில்..

‘‘ஆமா லைப்ரேரிங்கிறது படிக்கிற இடம் தானே ..

‘‘அங்க ஒரு குரூப் உட்காந்துகிட்டு அரட்டை அடிச்சிட்டு இருக்கானுக. ஏண்டா படிக்கிற இடத்தில அப்பிடி பேசிட்டு இருக்கீங்கன்னு கேட்டா என்னையவே திரும்ப கேள்வி கேக்குறானுக. லெப்ட் ரைட்டுன்னு விட்டேன் பாரு. அப்பிடியே எந்திரிச்சு போயிட்டாங்க . அதான் இந்த கோபம்’’ என காமராசு சொன்னதும் நித்யாவுக்கு திடீரெனக் கோபம் வந்தது

‘‘ஏய் நித்யா ஏன் இப்பிடி கோபப்படுற..?

‘‘எவனோ ஒருத்தன் சும்மா.. சும்மா.. ஹாரன் அடிச்சிட்டு இருக்கான். எரிச்சலா இருக்கு. நான்சென்ஸ்; இவனுக்கெல்லாம் மூளையிருக்கா’’ என்றாள் நித்யா இதைக்கேட்டதும் கட கடவெனச் சிரித்தான் காமராசு.

‘‘ஏன் சிரிக்கிறீங்க…?

‘‘ஒண்ணுல்ல.. ’’என்று மீண்டும் சிரித்தான்.

‘‘இதன் அர்த்தம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன் என்றாள் நித்யா.

இதுதான் சமூகக் கோபம்;இது உனக்கும் தொற்றிக் கொண்டது’’ என்றான் அவன்.

தீமை கண்டு பேசாதிருப்பது பெரும் தவறு. இதை அவளும் சரி என உணரத் தொடங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *