செய்திகள்

வேட்பு மனு பரிசீலனையில் 2,743 மனுக்கள் நிராகரிப்பு; 4,512 மனுக்கள் ஏற்பு

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது

வேட்பு மனு பரிசீலனையில் 2,743 மனுக்கள் நிராகரிப்பு; 4,512 மனுக்கள் ஏற்பு

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை, மார்ச் 22–

தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் வேட்புமனுக்கள் பரிசீலனையில் 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 12ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஆரம்பத்தில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் இறுதி நாளான 19-ந் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும், 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 மனுக்களும், குறைவாக வானூர், பவானிசாகர், திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் தலா 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 548 ஆண்களும், 87 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 636 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 55 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் குறைவாக 27 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 ஆண் 1 பெண் என 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7,255 வேட்புமனுக்கள் மீது நேற்று முன்தினம் பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத மனுக்கள், தேவையான விவரங்களை முறையாக பூர்த்தி செய்யாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்கள். இதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அப்போது 234 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார், யார் என்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வேட்பாளர்களின் செலவு விவரங்களை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கும். அவர்களது தினசரி செலவு விவரங்களை நிழல் பதிவேடாகவும் ஆணையம் பராமரிக்கும்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-–

தமிழகத்தில் 234 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 255 வேட்பு மனுக்களில், பரிசீலனையின்போது 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மொத்தம் தாக்கலான 23 மனுக்களில், 13 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் ஆகும். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம்.

சிவிஜில் செயலி மூலம் இதுவரை 1,971 புகார்கள் வரப் பெற்றுள்ளன. இதில் 1,368 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 712 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *